தமிழகம்

ஐஐடியில் குட்டி விமானங்கள் சாகசம்: வியப்போடு ரசித்த பார்வையாளர்கள்

செய்திப்பிரிவு

ஐஐடியில் நடைபெற்றுவரும் சாஸ்த்ரா தொழில்நுட்பத் திருவிழாவில் நேற்று குட்டி விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை பார்வையாளர்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.

சென்னை ஐஐடியில் சாஸ்த்ரா தொழில்நுட்ப திருவிழா சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. நாடு முழுwவதிலும் இருந்து சுமார் 30 ஆயிரம் பொறியியல் மாணவ-மாணவிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழாவில் தொழில்நுட்ப கண்காட்சிகள், பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகள் இடம்பெற்று வருகின்றன.

இரண்டாம் நாளான நேற்று மாலை குட்டி விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள், இளம் தொழில்நுட்ப நிபுணர்கள் வடிவமைத்த குட்டி விமானங்கள் வானத்தில் சீறிப்பாய்ந்தவாறும், குட்டிக்கரணம் போட்டும் பறந்தது சென்றன. இதைப் பார்வையாளர்கள் குறிப்பாக, குழந்தைகள் வியப்போடு பார்த்து ரசித்தனர். அதன் வடிவமைப்பாளர்கள் தரையில் இருந்தவாறு ரிமோட் மூலம் அவற்றை லாவகமாக இயக்கி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

பறவை வடிவிலான ஒரு குட்டி விமானம் பறந்தபோது அதை ஏதோ ஒரு வினோத பறவை என நினைத்து காக்கை கூட்டம் துரத்திய காட்சியை பார்வையாளர்கள் வியப்போடு பார்த்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

SCROLL FOR NEXT