தமிழகம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

செய்திப்பிரிவு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 27-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலை மாலையில் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.

இரவு 9 மணியளவில் தேர்நிலையை அடைந்ததும், சிவகாமசுந்தரி சமேத நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்த ருளினார். அங்கு நடராஜருக்கு இரவு முழுவதும் சிறப்பு தீபாராத னையும் அர்ச்சனைகளும் நடை பெற்றன. நேற்று அதிகாலை மகா அபிஷேகமும், இதையடுத்து சிறப்பு தீபாராதனைகளும், புஷ்பாஞ் சலியும், லட்சார்ச்சனையும் நடை பெற்றது.

தொடர்ந்து காலை 10 மணிக்கு திரு ஆபரண அலங்கார காட்சியும், தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகளும் பின்னர் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி வீதி உலாவும், பிற்பகல் 3 மணியளவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் மூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, முன்முகப்பு மண்டபத்தில் உள்ள நடனப் பந்தலில் முன்னும் பின்னுமாக 3 முறை வலம் வந்து நடனமாடி, பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சி அளித்தனர்.

இதையடுத்து சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.

முன்னதாக தருமபுரம் ஆதினம் சார்பில் தர்மபுர ஆதினகர்த்தா 26 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் நடராஜருக்கு மகா அபிஷேகம் செய்ய 90 கிலோ எடை கொண்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள வெள்ளியிலான வேதிகையை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் முன்னிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களிடம் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவையாறு கட்டளை விசாரணை ஸ்ரீமத்மவுன குமாரசாமி தம்பிரான் சாமிகள் செய்திருந்தார்.

இன்று முத்து பல்லக்குடன் ஆருத்ரா விழா நிறைவு பெறுகிறது.

          
SCROLL FOR NEXT