தமிழகம்

ஆபரேஷன் ஸ்மைல் நடவடிக்கையால் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவர்-சிறுமிகள் 6 பேர் மீட்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் காணா மல் போன 6 சிறுவர்- சிறுமிகள் ஆபரேஷன் ஸ்மைல் நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் காணா மல் போன குழந்தைகள், சிறுவர்- சிறுமியர்களை கண்டுபிடிக்கும் வகையில் இம்மாதம் 1 முதல் 31-ம் தேதி வரை, ஆபரேஷன் ஸ்மைல் திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி மாவட்டம் முழுவதும் போலீஸாருக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி திருவள்ளூர் மாவட் டத்தில் குழந்தைகள் மற்றும் சிறார்கள் கடத்தல் குற்றங்களை தடுக்கவும், கடத்தப்பட்ட குழந்தை கள், சிறுவர்- சிறுமியர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்தில் 6 சிறப்புக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக் குழுக்கள் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன 21 பேரை கண்டுபிடிக்க தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

இதன்விளைவாக கடந்த 2012, 2013-ல், கும்மிடிப்பூண்டி- சிப்காட், பென்னலூர்பேட்டை, வெள்ளவேடு, பொதட்டூர் பேட்டை, சோழவரம் ஆகிய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன நரேஷ்பாபு(15), குணசேகர்(15), ராசாத்தி (16), விஜயலெட்சுமி மற்றும் நந்தினி(16), தீபிகா(15) ஆகிய 6 சிறுவர்- சிறுமியர்கள், 3 நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.

மற்றவர்களையும் தேடும்பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்பி சாம்சன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT