தமிழகம்

சென்னையில் போதிய பராமரிப்பு இல்லாமல் இயங்கும் விளையாட்டு விடுதி: உங்கள் குரலில் மாணவர்கள் புகார்

செய்திப்பிரிவு

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு விளையாட்டு விடுதி போதிய பராமரிப்பு இல்லாமல் இயங்கி வருவதாக உங்கள் குரலில் மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்.

சென்னையில் நந்தனம், நேரு விளையாட்டரங்கம், அசோக் நகர் ஆகிய 3 இடங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகள் அமைந்துள்ளன. இதில் கிரிக்கெட் பயிற்சிபெறும் மாணவர்களுக்கான விடுதி அசோக்நகர் புதூரில் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50 பள்ளி மாணவர்கள் தங்கியுள்ளனர்.

இந்த விடுதியில் முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை என்றும், விடுதி அறை மற்றும் கிரிக்கெட் மைதானத்தில் போதிய பராமரிப்பு இல்லை என்றும் அங்கு தங்கியுள்ள மாணவர்கள் ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தனர். இதுபற்றி அவர்கள் மேலும் கூறியதாவது:

இங்குள்ள கிரிக்கெட் பயிற்சி மைதானம் மிகவும் அசுத்தமாக உள்ளது. மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க 2 பயிற்சியாளர்கள் உள்ளனர். அவர்கள் வெளிநபர்களுக்குத்தான் பயிற்சி அளிக்கிறார்களே தவிர இங்குள்ள மாணவர்களுக்கு ஒழுங்காக பயிற்சி அளிப்பதில்லை. வெளிநபர்கள் கிரிக்கெட் விளையாடும்போது அவர்கள் அடிக்கும் பந்துகளை எடுத்துப் போடுவதற்கு மட்டுமே எங்களைப் பயன்படுத்துகின்றனர்.

மாணவர்கள் தங்கியுள்ள விடுதியின் சுவர் மிகவும் பழுதடைந்துள்ளது. அது எப்போது விழுமோ என்று பயமாக இருக்கிறது. தினமும் அதன் அருகில்தான் நாங்கள் பல் துலக்குகிறோம். விடுதி வார்டன் பெரும்பாலான நேரங்களில் விடுதியில் இருப்பதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கட்டில்கள் உடைந்த நிலையில் உள்ளன. அவற்றில்தான் உறங்க வேண்டியுள்ளது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உயர் அதிகாரிகள் இந்த விடுதிக்கு வந்து ஆய்வுசெய்தால் மேற்கண்ட குறைபாடுகளை நேரில் பார்க்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT