நக்ஸல்கள் கூடி ஆலோசனை நடத்தும் இடமாக (மீட்டிங் பாய்ன்ட்) சென்னையை பயன்படுத்தி வருவதை க்யூ பிரிவு போலீஸார் கண்டுபிடித் துள்ளனர்.
தமிழகம் - கேரள எல்லையான கோவை மாவட்டம் அட்டப்பாடியில் கடந்த 22-ம் தேதி போலீஸ் வாகனங்கள், சோதனை சாவடிகள் மீது நக்ஸலைட்கள் தாக்குதல் நடத்தினர். வட மாநிலங்களில் பலமாக இருக்கும் நக்ஸலைட்கள், தென்னிந்தியாவில் மெதுவாக காலூன்ற தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் தருமபுரி, தேனி மாவட்ட காட்டுப் பகுதிகளில் இருந்த நக்ஸலைட்கள் இப்போது சென்னையில் ஊடுருவி, தங்கள் அமைப்பின் வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றனர். நக்ஸல்களுக்கு தேவையான பணம் மற்றும் பொருட்களை சேகரிப்பதையும் தொடங்கியுள்ளனர். நக்ஸல்களின் ஆலோசனை மையம் (மீட்டிங் பாய்ன்ட்) ஆகவும் சென்னையை பயன்படுத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வனப்பகுதியில் 2002-ம் ஆண்டு ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட 32 நக்ஸலைட்களில் 29 பேரை போலீஸார் கைது செய்தனர். சிவா என்கிற பார்த்திபன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாரதி, தசரதன் ஆகியோர் மட்டும் தப்பிச் சென்றனர். இருவரையும் தமிழக போலீஸாரால் இன்றுவரை பிடிக்க முடியவில்லை. தசரதன் யார்? அவர் எப்படி இருப்பார்? என எந்த விவரங்களும் கிடைக்காத நிலையில் அவரை தேடும் பணியை நிறுத்தி விட்டனர். பாரதியை பிடிக்க பலமுறை முயன்றும் தோல்வியே மிஞ்சியது. இந்நிலையில், ஆள்மாறாட்டத்தில் வேறொரு பாரதியை மூன்று முறை கைது செய்து விடுவித்துள்ளனர் போலீஸார்.
சுட்டுக் கொல்லப்பட்ட சிவாவின் அண்ணன் துரைசிங்கவேலுவின் மனைவி பெயர் பாரதி என்கிற ராகினி. இவர்தான் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட பாரதி என்று போலீஸார் சந்தேகத்தில் கைது செய்து விசாரணை நடத்தி விடுவித்தனர். மூன்று முறை வேறொரு பாரதியை கைது செய்து மூக்குடைபட்ட போலீஸாருக்கு, நக்ஸலைட் பாரதி சென்னையில்தான் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் கிடைக்க சென்னையிலும், சுற்று வட்டாரப் பகுதிகளிலும் ரகசிய விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஊத்தங்கரை ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளிவந்த பொடா பத்மா தலைமறைவாகி விட்டார். அவரும் சென்னையில் பதுங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நக்ஸல்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "நக்ஸலைட்டுகள் பேசிய சில தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டபோது, 'எம்.பி’க்கு வந்து விடு, ‘எம்.பி’யில் 2-ம் தேதி பார்க்கலாம், ‘எம்.பி’ பகுதிதான் நமக்கு பாதுகாப்பானது' என பேசினர். ‘எம்.பி’ என்றால் என்ன என்று விசாரணை நடத்திய எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி.
'மீட்டிங் பாய்ன்ட்' என்பதைத் தான் சுருக்கி 'எம்.பி' என்று அழைத்துள்ளனர். சென்னை அருகே பூந்தமல்லியில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தைத்தான் நக்ஸலைட்கள் ‘மீட்டிங் பாய்ன்ட்’ ஆக பயன்படுத்தி உள்ளனர். இதை தாமதமாக அறிந்து கொண்ட நாங்கள் அதிர்ந்து விட்டோம். பொடா வழக்குகள், நக்ஸல்கள் மீதான வழக்குகள் இந்த நீதிமன்றத் தில்தான் விசாரணை நடத்தப்படும். இதனால் விசாரணைக்கு வரும் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த நக்ஸல்கள் இங்கு சந்தித்துக் கொண்டு தங்களது தொடர்புகளை விரிவுபடுத்தியுள்ளனர்.
வேறு எந்த இடத்தில் நக்ஸல்கள் கூடினாலும் போலீஸ் மோப்பம் பிடித்த நிலையில், ரொம்ப சாமர்த்தியமாக நீதிமன்ற வளாகத்தையே அவர்களின் ரகசிய ‘மீட்டிங் பாய்ன்ட்’ஆக பயன்படுத்தி விட்டனர். நக்ஸல்கள் சென்னைக்குள் அதிகமாக வர இதுவே காரணமாகி விட்டது. வெவ்வேறு பகுதி நக்ஸல்கள் ஒன்று கூடுவதை தடுக்க, ஒரே இடத்தில் நடக்கும் விசாரணையை பிரிக்க வேண்டும்" என்றார்.
நக்ஸல்கள் மீதான விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் இன்று (2-ம் தேதி) நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
வட மாநிலங்களில் மாவோ யிஸ்ட்கள், நக்ஸல்பாரிகள் என்ற பெயர்களில் அழைக்கப்படும் நக்ஸலைட்கள் இப்போது தமிழகத்திலும் வளர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களை முளையிலேயே கிள்ளி எறிய தமிழக க்யூ பிரிவு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.