தமிழகம்

28 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: இருவேறு சம்பவங்களில் 4 பேர் கைது

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இரு வேறு சம்பவங்களில் கடத்திவரப்பட்ட 28 கிலோ தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு காரில் தங்கம் கடத்திச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆவுடையார்கோவிலில் மீமிசல் சாலையில் புலனாய்வு பிரிவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு காரில் கட்டிகளாக 19 கிலோ 600 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவறை கடத்தி வந்த ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த காளிமுத்து மகன் சுபகுமார்(38), நா.பெரியசாமி(50) ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தங்கம் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

7.5 கிலோ தங்கக் கட்டி

மற்றொரு சம்பவத்தில் சென்னை விமான நிலையத்தில் ரூ.2.50 கோடி மதிப்புள்ள 7.5 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று வந்த விமானத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வுத் துறைக்கு (டிஆர்ஐ) ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஆர்ஐ அதிகாரிகள் சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தனி அறையில் சோதனை

அப்போது சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு திரும்பிய சென்னையை சேர்ந்த சையது அபுதக்கர் (32), ஹாஜா அலாவுதீன் (34) ஆகியோரின் உடைமைகளை சோதனை செய்ததில் எதுவும் சிக்கவில்லை. அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, அவர்கள் இருவரும் உடலில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.2.50 கோடி மதிப்புள்ள 7.5 கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT