துப்பாக்கியைக் காட்டி மூதாட் டியை மிரட்டிய வழக்கில் காஞ்சிபுரம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி உட்பட 6 போலீஸார் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, போலீஸ் தரப்பில் கூறியது: திருக்கழுக் குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண வேணி(75). இவர், தனக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை மகன்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு தானப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.
ஆனால், அந்த நிலத்தை கிருஷ்ணவேணியின் அண்ணன் 10 ஆண்டுகளுக்கு முன்பே மோசடி செய்து தனது பெயருக்கு பத்திரப் பதிவு செய்துள்ளார். மேலும், அந்த நிலத்தை தனது மகன்கள் பெயருக்கு பதிவுசெய்து, பின்னர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேருக்கு விற்றுள்ளார்.
அந்த நிலத்தை வாங்கியவர்கள், கிருஷ்ணவேணி மீது காஞ்சிபுரம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகார் கொடுத்துள்ளனர். இதனை விசாரித்த டிஎஸ்பி மண வாளன் உள்ளிட்ட 6 போலீஸார் கிருஷ்ணவேணியை துப்பாக்கிக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்துக்கு போலீஸாரே கிருஷ்ணவேணியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, கிருஷ்ணவேணி தனது மகன்களுக்கு பதிவு செய்து கொடுத்த தானப் பத்திரத்தை ரத்து செய்ய வைத்துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்குள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. போலீஸார் தன்னை மிரட்டி, தானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டார்கள் என்று முதல்வரின் தனிப் பிரிவுக்கு கிருஷ்ணவேணி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் நடத்திய விசாரணையில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணவேணி அளித்த புகார் உண்மை இல்லை என்று முதல்வரின் தனிப் பிரிவுக்கு பதில் அனுப்பி உள்ளனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணவேணி வழக்கு தொடர்ந்தார். இந்த புகார் மனு மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வேலூர் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
அதன்படி, அப்போதைய வேலூர் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் வெள்ளையன் விசாரணை நடத்தினார்.
ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலக கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரிக்கப்பட்டது. கிருஷ்ணவேணி அளித்த புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரை வில் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதில், உண்மை தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.