அனைத்து ரயில் பெட்டிகளிலும் 2021-22ம் ஆண்டுக்குள் பயோ டாய்லெட் வசதி கொண்டுவரப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே சார்பில் சென்னையில் குடியரசு தின விழா நேற்று நடந்தது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ரயில்வே பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது:
தெற்கு ரயில்வே கடந்த ஆண் டில் டிசம்பர் வரை மொத்தம் 304 சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது. கூடுதலாக 5,440 பெட்டிகள் இணைக்கப்பட்டன. பயணிகளின் வசதிக்காக சில ரயில்களில்
36 பெட்டிகள் நிரந்தரமாக இணைக் கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு - விழுப்புரம் இடையே நடந்துவரும் 2-வது ரயில்பாதை அமைக்கும் பணி மார்ச் இறுதிக்குள் நிறைவ டையும். சென்னை பேசின் பிரிட் ஜில் 5 மற்றும் 6-வது பாதை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
எண்ணூர்–அத்திப்பட்டு இடையே நடந்து வரும் ரயில்பாதை பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும். திருவள்ளூர்-வேளச்சேரி ரயில் சேவை இந்த ஆண்டு தொடங்கப்படும். விருதுநகர் - நெல்லை, விழுப்புரம் - காட்பாடி இடையே மின்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. தற்போது சென்னை - நெல்லை மின்பாதைகளில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை சென்ட்ரலில் முதல்முறையாக வை-ஃபை சேவை தொடங்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவு ரயில் நிலையங்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படும். தெற்கு ரயில்வேயில் இதுவரை 675 ரயில் பெட்டிகளில் ‘பயோ டாய்லெட்’ வசதி செய்யப்பட்டுள்ளது. வரும் 2021-22-ம் ஆண்டுக்குள் எல்லா ரயில் பெட்டிகளிலும் இந்த வசதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.