தமிழகம்

பாரதியார் பிறந்த எட்டயபுரத்தை தேசப்பற்று மையமாக மாற்ற வேண்டும்: தருண் விஜய் எம்.பி. வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

`எட்டயபுரத்துக்கு வந்திருப்பதை புனித யாத்திரையாக நினைக்கிறேன். பாரதியார் பிறந்த இந்த புண்ணிய பூமியை தேசப்பற்று மையமாக மாற்ற வேண்டும்’ என பாஜக எம்.பி. தருண் விஜய் தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் தொடங்கிய திருக்குறள் திருப்பயணத்தில் பங்கேற்றுள்ள தருண் விஜய் எம்.பி. நேற்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அவருக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசும்போது, `திருக்குறள் திருப்பயணம் எனக்கு மிகப்பெரிய அனுபவத்தை தந்துள்ளது. தமிழக மக்களின் அன்பும், பாசமும் என்னை நெகிழச் செய்கிறது. இந்த திருப்பயணத்தை பெருமையாக கருதுகிறேன்.

தமிழ் மொழி இந்தியா முழுவதும் போய்ச் சேரவேண்டும். திருக்குறள் வாழ்க்கை நெறிமுறைகளை கற்றுத் தருகிறது; சரியான பாதையில் நம்மை அழைத்துச் செல்கிறது. நாகரிகத்தை எடுத்து செல்லும் வாகனமாக திருக்குறள் விளங்குகிறது.

பெற்றோர் தங்கள் குழந்தை களிடம் தமிழில் பேச வேண்டும். தமிழை சொல்லிக் கொடுக்க வேண் டும். தாய்மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என்றார் அவர்.

பின்னர் எட்டயபுரம் சென்ற தருண் விஜய் அங்குள்ள உமறுப்புலவர் மணிமண்டபத்துக்கு சென்றார். அங்குள்ள அமுதகவி நினைவிடத்தில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

புனித மண் ஒப்படைப்பு

தொடர்ந்து எட்டயபுரத்தில் உள்ள பாரதி இல்லத்துக்கு சென்ற தருண் விஜய் அங்குள்ள பாரதியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டில் இருந்து எடுத்து வந்த புனித மண் அடங்கிய கலசத்தை, பாரதியார் இல்ல பொறுப்பாளர் மோகனிடம் அவர் வழங்கினார்.

வரவேற்ற குழந்தைகள்

முன்னதாக பாரதியார் இல்லம் மற்றும் மணிமண்டபத்தில் தருண் விஜய் எம்.பி.யை பாரதியார், திருவள்ளுவர், விவேகானந்தர் வேடமணிந்த நுற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வரவேற்றனர். அவர் களுக்கு திருக்குறள் புத்தகத்தை தருண் விஜய் பரிசளித்தார்.

SCROLL FOR NEXT