சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் உள்ள 110 கிலோவோல்ட் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. இந்த தீவிபத்தையடுத்து ரூ.1 கோடி மதிப்பில் சீர்செய்ய மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
சாலைக்கிராமத்தில் உள்ள துணை மின் நிலையம் மூலம் 30 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 150 கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு 1967-ம் ஆண்டு நிறுவப்பட்ட டிரான்ஸ்பார்மர் மூலம் மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று காலை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் து.முனுசாமி சம்பவ இடத்துக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட மின் மேற்பார்வையாளர் நல்லம்மாள், வட்டாட்சியர் ஜீவா ஆகியோர் உடன் சென்றனர்.
தீயணைப்புத் துறை டி.எஸ்.பி. பொன்மாரியப்பன் தீவிபத்து சேதம் குறித்து ஆய்வு செய்தார். சுமார் ரூ.1 கோடி மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த தீவிபத்து காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு தற்காலிகமாக இளையான்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் நடைபெறுகின்றன. தீவிபத்து குறித்து சாலைக்கிராமம் உதவிப் பொறியாளர் சிவக்குமார் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.