மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் இந்திய நாட்டிய விழாவைக் காண உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றனர்.
தமிழக சுற்றுலாத் துறை சார்பில் 1992-ம் ஆண்டு முதல் மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் டிச. 25 முதல் பொங்கல் நாள் வரை - வார இறுதிநாட்களில் நாட்டிய விழா நடத்தப்பட்டு வந்தது. இதில், தமிழகம் மட்டுமன்றி கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களின் கலை மற்றும் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் நடனங்கள் இடம் பெற்றன.
நாட்டிய விழாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததையடுத்து, 2009-ம் ஆண்டு முதல் நாட்டிய விழாவை டிச. 25 தொடங்கி ஜன. 25-ம் தேதி வரை 32 நாட்களுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, இந்திய நாட்டிய விழா என்ற பெயரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு டிச. 21-ம் தேதி தொடங்கிய இந்திய நாட்டிய விழா, வருகிற 21-ம் தேதி வரை நடைபெறும். நாட்டிய விழாவை தினமும் சுமார் 200 வெளிநாட்டினர் உட்பட 1000 பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு இன மக்களின் கலை, கலாச்சாரத்தை ஒரே மேடையில் பார்ப்பதை அரிய வாய்ப்பாக கருதுகின்றனர் வெளிநாட்டினர்.
தினமும் மாலை 5.30 மணிக்குத் தொடங்கி இரவு 8.30 வரை நடை பெறும் இந்த நாட்டிய விழாவில், தமிழக கலாச்சாரத்தை வெளிப் படுத்தும் வகையில் மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலைகளை தமிழக கிராமியக் கலைஞர்கள் நிகழ்த்துகின்றனர். இதேபோல, பிற மாநிலக் கலை ஞர்களும் பாரம்பரிய நடனங்கள் மூலம் தங்கள் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இதுகுறித்து சுற்றுலாத் துறை அலுவலர் கூறும்போது, ‘இந்திய நாட்டிய விழாவைக் காண வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 50 ஆயிரம் பேர் வந்தனர். இதில், 6,000 பேர் வெளிநாட்டினர். நிகழாண்டு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
குறிப்பாக, நிகழாண்டு அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளிலிருந்தும் கலைக் குழுவினர் வந்து நாட்டிய விழாவில் பங்கேற்று சென்றனர். இது, இந்திய நாட்டிய விழா உலக அளவில் சிறப்பு பெற்று வருவதைக் காட்டுகிறது’ என்றார்.