சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் குளிர் மேலும் பத்து நாட்களுக்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 30-ம் தேதி பதிவான குறைந்தபட்ச வெப்பமான 20.3 டிகிரி ஜனவரி மாதத்தின் மிக குறைந்த வெப்பமாகும். ஆனால், இந்த ஆண்டு அதைவிட குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் ஜனவரி 13-ம் தேதி மீனம்பாக்கத்தில் 18 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 20 டிகிரியும் குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது. ஜனவரி 14-ம் தேதியும், 15-ம் தேதியும் மீனம்பாக்கத்தில் 19 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 20 டிகிரியும் பதிவாகியது.
ஜனவரி 16-ம் தேதி மீனம்பாக்கத்தில் 21 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 23 டிகிரியும் பதிவாகியது. அதே போன்று 17-ம் தேதி மீனம்பாக்கத்தில் 20 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 21 டிகிரியும் குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகியது.
இதே போன்ற வானிலை சென்னையில் மேலும் பத்து நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடல் பகுதியிலிருந்து தொலைவில் இருக்கும் தாம்பரம், மீனம்பாக்கம், பரங்கி மலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும் என்பதாலும், மலைகளுக்கு அருகில் இருப்பதாலும், கடலோர பகுதிகளை விட குளிர் அதிகமாக இருக்கும்.
அடுத்த சில நாட்களுக்கு சென்னையின் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 21 டிகிரியாகவும் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 30 டிகிரியாகவும் இருக்கும். காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும்.