சென்னை: முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின்கீழ் நகர்ப்புற உள்ளாட்சிகளில் ரூ.376.65 கோடியில் 2,880 திட்டப் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ், நகர்ப்புற உள்ளாட்சிகளில் வெளிப்படையாகவும், சிக்கனமாகவும் திட்டப் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தலைமையில் பொது திட்ட அனுமதி மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஒருங்கிணைப்பு அதிகாரியாக தமிழ்நாடு நகர்ப்புற நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் செயல்படுகிறார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற இக்குழுவின் முதல் கூட்டத்தில், நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகளில் ரூ.154 கோடியில் 1,513 திட்டப் பணிகள், சென்னை மாநகராட்சியில் ரூ.138 கோடியில் 680 திட்டப்பணிகள், பல்வேறு பேரூராட்சிகளில் ரூ.84.49 கோடியில் 687 திட்டப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தம் ரூ.376.65 கோடியில் 2,880 திட்டப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மேற்கண்ட திட்டப் பணிகளை மேற்கொள்ள அரசு நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை மாநகராட்சியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க முதல்கட்டமாக ரூ.34.46 கோடியில் புதிதாக 36 பூங்காக்கள், ரூ.9.52 கோடியில் 11 புதிய விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட உள்ளன.
முக்கிய சேவைகள் நேரலையில் கண்காணிப்பு
தமிழகத்தில் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் கீழ் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிகழ்நேரக் கண்காணிப்பு அமைப்பை வடிவமைத்தல், மேம்படுத்துதல், ஒருங்கிணைத்தல், செயல்படுத்துதல், பராமரித்தல் பணிக்காக அமைப்பு ஒருங்கிணைப் பாளரை தேர்ந்தெடுக்க நகராட்சி நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றம், குப்பை அகற்றம் ஆகிய சேவைகளை நிகழ்நேரத்தில் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கண்காணித்து, மக்கள் புகார் தெரிவிப்பதற்கு முன்பே பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.