மதுரை மாவட்டம், பாசிங்கா புரத்தைச் சேர்ந்தவர் சிவா. காலணி தயாரிக்கும் தொழிலாளி. இவர் பயன்படுத்தப்பட்டு வீணான சைக்கிள் டயர்களில் இருந்து விதவிதமான பெல்ட்டுகளை தயாரித்து வருகிறார். பொதுவாக தோல் மற்றும் ரெக்சின் மூலப்பொருளைக் கொண்டுதான் இளைஞர்கள் அணியும் விதவிதமான பெல்ட்டுகள் தயாரிக் கப்பட்டு கடைகளிலும், தெரு ஓரங்களிலும் அதிக அளவில் விற்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தொழிலாளி சிவா சைக்கிளில் பயன்படுத்தப் பட்ட பழைய டயர்களை கருப்பு, சிவப்பு, நீலம் உள்ளிட்ட பல வண்ணங்களில் அழகழகான பெல்ட்டாக மாற்றி வருகிறார். இதனால், ஏற்கெனவே பயன்படுத் திய டயர்கள் குப்பையாகாமல் தவிர்க்கப்படும்.
இதுகுறித்து சிவா கூறும்போது, கடைகளில் கிடைக்கும் பழைய சைக்கிள் டயர்களை வாங்கி, பெல்ட் தயாரிப்பதற்கு தேவையான பகுதிகளை மட்டும் முதலில் வெட்டி எடுத்து விடுகிறோம். பின்னர், வெட்டி எடுத்த பகுதியை தண்ணீரில் ஊற வைத்து, அவற்றை சுத்தம் செய்கிறோம்.
அதன் பின்னர், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை செய்கிறோம். இதுபோன்ற பல்வேறு பணிகளை முடித்து 5 நாட்களுக்கு பிறகு தான் அந்த டயரை பெல்ட்டாக மாற்ற முடியும். ஆரம்பத்தில் பெல்ட்டாக மாற்றும் முயற்சியில் நிறைய டயர்கள் வீணாயின. பின்னர், சில மாற்றங்களை செய்ததில், இதுவரை 45 பெல்ட்டுகளை தயாரித்துள்ளோம் என்றார்.