தமிழகம்

வழக்கை திசைத் திருப்ப முயற்சி: தயாநிதி மாறன் மீது ஆர்.எஸ்.எஸ். சாடல்

செய்திப்பிரிவு

தன் மீதான குற்றச்சாட்டுகளை சந்திக்க தைரியமில்லாமல் தயாநிதி மாறன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது பழி சுமத்துகிறார். என்று ஆர்.எஸ்.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சென்னையில் உள்ள அவரது வீட்டில் சட்ட விரோதமாகதொலைபேசி இணைப்பை ஏற்படுத்திக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அவர் மீது 2013ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

அதன் அடிப்படையில் சிபிஐ மேற்கொண்ட விசாரணையை தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் மற்றும் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் உட்பட மூன்று பேரை சிபிஐ தற்போது கைது செய்துள்ளது.

தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களை சந்திக்க தைரியம் இல்லாமல், தேவையின்றி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது தயாநிதி மாறன் அபாண்டமான பழியை சுமத்தி உள்ளார். இந்த வழக்குவிசாரணைக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இதை தமிழகமக்களும் நன்கு அறிவர்.

ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி அவர்கள் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து வருகின்றார். அவர் நமது நாட்டில் நடைபெற்றுள்ள பல்வேறு ஊழல்களை தனது கட்டுரைகளின் வாயிலாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார். அவர் வெளிப்படுத்திய ஊழல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது எவ்வித குற்றச்சாட்டையும் கூறியதில்லை.

தயாநிதி மாறன் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை திசைதிருப்பும் பொருட்டு வேண்டுமென்றே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வம்புக்கு இழுத்துள்ளார்.

தமிழகத்தில் 75 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அமைதியாக, ஆக்கப்பூர்வமான பல செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் வளர்ச்சிக்கு எந்த அரசியல் கட்சியின் ஆதரவோ உதவியோ தேவையில்லை. கட்சி, பதவி, அரசியல் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் இடையூறுகள், அவதூறுகள், அபாண்ட குற்றச்சாட்டுகள் என அனைத்தையும் கடந்து, தமிழக மக்களின் அமோக ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்து வருகிறது.

தனது ஊழலை மூடி மறைப்பதற்காகவும், பிரச்சினையை திசை திருப்புவதற்காகவும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை வீண் வம்புக்கு இழுக்கின்ற தயாநிதி மாறன் அவர்களை தமிழக ஆர்.எஸ்.எஸ். வன்மையாகக் கண்டிக்கிறது."

என்று சாடியுள்ளது.

SCROLL FOR NEXT