நங்கநல்லூரில் ஏ.சி. மெஷின் வழியாக மயக்க மருந்தை செலுத்தி, வீட்டில் இருந்தவர்களை மயக்கமடைய வைத்து 40 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சென்னை நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா (39). இவரது மனைவி வித்யா (35). சாப்ட்வேர் இன்ஜினீயர்களான இருவரும் சிறுசேரியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்களின் வீடு 2 தளங்களைக் கொண்டது. நேற்று முன்தினம் இரவு தரை தளத்தில் கிருஷ்ணாவின் தந்தை ராகவனும் (60), முதல் தளத்தில் கிருஷ்ணா, வித்யா இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கம் உடைய ராகவன், நேற்று காலை 7.30 மணிக்கு விழித்திருக்கிறார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடப்பதையும், ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், மாடிக்கு சென்று பார்த்தார். நீண்ட நேரம் கதவை தட்டிய பிறகே கிருஷ்ணாவும், வித்யாவும் வந்து கதவை திறந்துள்ளனர்.
கிருஷ்ணாவின் அறையில் பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள வைர கம்மல்கள், 40 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. கொள்ளை நடக்கும் வரை எப்படி தூங்கினோம் என்பது அவர்களுக்கு புரியவில்லை.
இந்நிலையில் வீட்டுக்குள் பயங்கர நெடியுடன் நாற்றம் வீசுவதை உணர்ந்தனர். இதுகுறித்து பழவந்தாங்கல் போலீஸில் கிருஷ்ணா புகார் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து சோதனை செய்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. அது தெருமுனை வரை ஓடி நின்றுவிட்டது.
கொள்ளை குறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கிருஷ்ணாவின் வீட்டைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இரு தளங்களிலும் ஏ.சி. மெஷின் உள்ளது. அதன் வழியாக மயக்க மருந்தை வீட்டுக்குள் செலுத்திய கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்கள் மயக்கம் அடைந்ததை உறுதி செய்து கொண்டு தரை தளத்தில் இருந்த ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பதற்றமில்லாமல் பொறுமையாக கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு குளிர்சாதன இயந்திரத்தை சர்வீஸ் செய்வதற்காக 3 பேர் கிருஷ்ணா வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள்தான் இந்தக் கொள்ளை யில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் இருக்கிறது. இருப்பினும் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு போலீஸார் தெரிவித் தனர்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
வீடுகளில் பாதுகாப்பாக இருப்பது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏ.சி., பிரிட்ஜ் போன்ற பொருட்கள் பழுதாகும்போது, அவற்றை சரிசெய்ய ஆட்களை வீட்டுக்கு வரவழைக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படி அறிமுகமில்லாத நபர்கள் வீட்டுக்குள் வரும்போது, அவர்கள் வேலை செய்யும் இடத்தை தவிர மற்ற அறைகளின் கதவுகளை பூட்டி வைத்துவிட வேண்டும். வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, வசதி, எப்போது வீட்டில் ஆள் இருக்க மாட்டார்கள் என்பது போன்ற எந்த தகவலும் அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேலையைத் தவிர மற்ற எந்த விஷயம் குறித்தும் அவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வேலை செய்ய வருபவரின் பெயர், செல்போன் எண், முகவரி போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் எப்போதும் ஆட்கள் இருப்பார்கள், நாய்கள் உள்ளது. ஏதாவது சத்தம் கேட்டால் அருகே இருப்பவர்கள் ஓடிவருவார்கள் என ஏதாவது சொல்லி நாம் பாதுகாப்பாக இருப்பதை அறிமுகமில்லாத நபர்களுக்கு புரியவைக்க வேண்டும்.
சில நிறுவனங்களில் இருந்து சர்வீஸ் செய்ய வரும் நபர்களின் விவரங்களையும், நேரத்தையும் முன்கூட்டியே தெரிவித்து விடுவார்கள். அவர்களிடமும் இதேபோன்ற கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்