திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச்செயலாளர் மு.க.அழகிரி, திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் தனது தாயார் தயாளு அம்மாளை நேற்று சந்தித்தார். சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் கோபாலபுரம் வீட்டிலிருந்த அழகிரி, தயாளுவுடன் மனம் விட்டு பேசிச் சென்றார்.
உட்கட்சி மோதல் காரணமாக திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்த மு.க.அழகிரி, கடந்த மார்ச் மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது முதல் திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுக உட்கட்சி தேர்தலிலும் அழகிரி ஆதரவாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், மு.க.அழகிரி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்திருந்தார். ‘திமுக திருந்தினால் கட்சியில் சேரத் தயார்’ என்று பேட்டியளித்தார். இது திமுகவில் அவர் மீண்டும் இணைய விருப்பம் தெரிவிப்பதாக கருதப்பட்டது. ஆனால் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மூலம் கட்சி தலைமை அவருக்கு பதிலடி கொடுத்தது. ‘திருந்த வேண்டியது அழகிரிதான்’ என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். இது அழகிரி மீது கட்சித் தலைமைக்கு உள்ள கோபத்தையே காட்டுவதாக கூறப்பட்டது. பொதுக்குழுவுக்கு முன்னர் அவர் திமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், திமுகவின் இந்த கருத்து, அதற்கு வாய்ப்பில்லை என்றே அரசியல் நோக்கர்களால் கருதப்பட்டது. அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்ப்பதற்கு பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அழகிரியை கண்டித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.பாரதியும் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று மதியம் 1.45 மணியளவில் மு.க.அழகிரி, கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார். வீட்டின் பின்பக்கமாக வந்த அழகிரி, தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்தார். சுமார் அரை மணி நேரம் தயாளுவுடன் மனம் விட்டு பேசிய அழகிரி மதியம் 2.30 மணி அளவில் கோபாலபுரம் வீட்டிலிருந்து பின்வாசல் வழியாகவே புறப்பட்டுச்சென்றார்.
மு.க.அழகிரி வீட்டுக்கு வந்த போது, திமுக தலைவர் கருணாநிதியும் அங்குதான் இருந்தார். மு.க.அழகிரி தயாளு அம்மாளை சந்தித்துவிட்டு சென்ற சிறிது நேரத்தில், கருணாநிதி வீட்டருகே இருக்கும் அவரது மகள் செல்வியின் வீட்டுக்கு மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வந்தது குறிப்பிடத்தக்கது.