செங்கல்பட்டு நீஞ்சல் மடுவிலிருந்து பொன்விளைந்த களத்தூர் கிராம ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளால், தண்ணீர் வரத்து குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது பொன் விளைந்த களத்தூர். இங்குள்ள 1,200 ஏக்கர் ஏரி தண்ணீர் மூலம் பொன்விளைந்த களத்தூர், ஆனூர், வள்ளிபுரம், பெரும் பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள 15 கிராமங்களின் 5,200 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. செங்கல்பட்டு பகுதியில் உள்ள நீஞ்சல் மடுவு திறக்கப்படும் காலங்களில், அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் இந்தக் கிராம ஏரியை வந்தடைந்து நிரம்பும்.
இந்த நிலையில், நீஞ்சல் மடுவி லிருந்து ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் பாதையில் உள்ள ஆக் கிரமிப்புகள் மற்றும் அனுமதியின்றி ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்புகளால், ஏரிக்கு தண்ணீர் வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால், ஏரி தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து பொன்விளைந்த களத் தூர் ஏரி தண்ணீரைப் பயன்படுத்துவோர் சங்கத்தினர் கூறியது: வாலாஜாபாதை அடுத்த தென்னேரி ஏரி மழைக் காலங்களில் நிரம்பும்போது, உபரிநீர் வழிந்தோடி செங்கல்பட்டு அருகே பாலாற்றில் கலக்கும் வகையில் 28 கி.மீ. தொலைவுக்கு இயற்கையாக நீஞ்சல் மடுவு கால்வாய் அமைந்துள் ளது. மேலும், இந்த மடுவில் ஊத்துக் காடு, தொள்ளாழி, எழிச்சூர், செட்டி புண்ணியம், கெளத்தூர், சேந்தமங் கலம், ஆப்பூர், வடகால், பாலூர், வில்லியம்பாக்கம் ஆகிய ஏரிகளிலி ருந்து வரும் உபரிநீரும் கலக்கும். இதனால், நீஞ்சல் மடுவில் மழைக் காலம் முடிந்த பிறகும் 3 அல்லது 4 மாதங்களுக்கு தண்ணீர் ஓடும்.
இந்த தண்ணீரை விவசாயத்துக் குப் பயன்படுத்த நீஞ்சல் மடுவில் ஆங்கிலேயே அரசு கடந்த 1940-ல் தடுப்பணை அமைத்தது. மேலும், தடுப்பணை அருகே பொன்விளைந்த களத்தூர் ஏரிக்கு 167 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் 10 கி.மீ. நீளத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டது. இதனால் விவசாயம் செழிப்பாக நடைபெற்றது.
பின்னர், நீஞ்சல் மடுவின் வலதுபுறத் தில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக பாலாற்றில் கலந் தது. இதனால், நீஞ்சல் மடுவு ரூ.9.7 கோடியில் சீரமைக்கப்பட்டது. அப்போதே, பொன்விளைந்த களத் தூர் ஏரிக்கு செல்லும் கால்வாயைத் தூர்வார வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது. ஆனால், கால்வாயை பொதுப் பணித் துறையின் பெயரளவுக்கு மட்டுமே தூர் வாரினர். மேலும், பாலாற்றின் கரையில் உள்ள அரசியல் பிரமுகர்களின் செங்கல் சூளைகளுக்குச் செல்வதற்காக, கால்வாயின் குறுக்கே அனுமதியின்றி சிமெண்ட் பழுப்புகளின் மூலம் ஆங் காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி யுள்ளனர். மேலும், சில இடங்களில் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் வரத்து பாதிக்கப் பட்டு, ஏரிக்கு சிறிதளவு தண்ணீர் மட்டுமே வந்து சேரும் நிலை உள்ளது.
கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், போதிய தண்ணீர் இன்றி பொன் விளைந்த களத்தூரில் விவசாயம் பாதிக் கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட பாலாறு கீழ்வடி நில கோட்ட செயற்பொறியாளர் கணேசன் கூறும் போது, ‘கால்வாயில் ஆக்கிரமிப்புகள் மற்றும் அனுமதியின்றி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வந்த புகார் குறித்து நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.