தமிழகம்

கொள்ளை சம்பவம் நடந்த வங்கி மீண்டும் திறப்பு: வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியை அடுத்த ராமாபுரம் கிராமத்தில் பாங்க் ஆஃப் பரோடா வங்கி (குந்தாரப்பள்ளி கிளை) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். இதில் 2500-க்கும் மேற்பட்டவர்கள் நகைக் கடன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24-ம் தேதி அதிகாலை, வங்கியில் புகுந்த மர்ம நபர்கள் லாக்கரை உடைத்து அதில், 975 பைகளில் வைக்கப்பட்டிருந்த 48.308 கிலோ மதிப்புள்ள 6,038 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து கோவை மேற்கு மண்டல ஐஜி சங்கர் உத்தர வின்பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொள்ளை சம்பவம் நடந்த வங்கி நேற்று திறக்கப்பட்டது. கொள்ளை சம்பவத்தில் தப்பிய நகைகளின் கடன் எண்கள் வங்கியில் ஒட்டப்பட்டிருந்தது.

நகைக்கடன் பெற்றிருந்த வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளின் நிலைகுறித்து அறிந்துகொள்ள வங்கியில் குவிந்தனர். முன்னதாக கிருஷ்ணகிரி டிஎஸ்பி சந்தான பாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் வங்கியைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வாடிக்கையாளர்கள் கண்ணீர்

இந்நிலையில் நகைகளை இழந்தவர்களுக்கு வங்கியிலிருந்து எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் சிலர் கூறியதாவது:

கிராமப்புற வங்கியில் பெரும்பாலும் விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும்தான் தங்களது தேவைக்காக நகையை அடகு வைத்திருக்கிறோம். தற்போது நகைகள் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சியாக உள்ளது. எங்களது நகைகளுக்கு உரிய தொகை கிடைக்குமா? செய்கூலி, சேதாரம் கணக்கீட்டு வழங்கப்படுமா? எனத் தெரியவில்லை.

இதில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். பொதுத்துறை வங்கி என்பதால்தான் நம்பிக்கையுடன், பாதுகாப்பு கருதி நகைகளை அடகு வைத்தோம். எங்கள் நகைகளுக்கு வங்கிதான் முழுபொறுப்பு. வங்கியை அதே ஊரில் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். பாதுகாவலர்கள், அதிநவீன பாது காப்பு உபகரணங்கள் பொருத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் கோவை மண்டல துணைப் பொது மேலாளர் சின்னசாமியிடம் கேட்டபோது, கொள்ளை போன நகைகள் மீது காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நகை மீட்கப்பட்டால் நகை அல்லது வங்கி விதி களின்படி காப்பீடு தொகை வழங்கப் படும். அது எவ்வளவு என்பது உயர்அதிகாரிகளும், தலைமையும் தான் முடிவு செய்யும். 32 வருடங்களாக செயல்பட்டுவரும் இந்தக் கிளை தொடர்ந்து செயல்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.

SCROLL FOR NEXT