கமிஷன் கொடுக்கும் விவகாரத்தில் ஒப்பந்ததாரர்கள் இடையே மதுரை பொதுப்பணித் துறை அலுவல கத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். அலு வலகமும் சூறையாடப்பட்டது.
மதுரை பாலரெங்காபுரத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் காந்தி(64). மதுரை அரசு மருத்துவ மனையில் ரூ1.45 கோடி மதிப் புள்ள பணிகளுக்கு, மதுரை பொதுப் பணித் துறை அலுவலகத்தில் நேற்று டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுப்பதற்காக காந்தி, மேலூரைச் சேர்ந்த பாண்டி உட்பட ஏராளமானோர் வந்திருந்தனர்.
கமிஷன் கொடுத்து டெண்டர் எடுப்பதில் ஒப்பந்ததாரர்கள் இடையே அதிகாரிகள் முன்னி லையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கம்பு, அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் அங்கு வந்த கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.
இதில் காந்தி, போஸ் ஆகியோர் காயம் அடைந்தனர். அலுவலகக் கண்ணாடிகள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. அதிகாரிகளும், ஊழியர்களும் அங்கிருந்து ஓடினர்.
இந்த மோதல்குறித்து தல்லா குளம் போலீஸில் காந்தி அளித்த புகாரின்பேரில் கூடல்நகர் குண சேகரன், மேல அனுப்பானடி நாகராஜ், மேலூர் பாண்டி, ஆழ்வார் ராஜ் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். காந்தி, போஸ் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
கமிஷன் பெறுவதில் நூதனம்
ஒப்பந்ததாரர் காந்தி கூறும் போது, மதுரை அரசு மருத்துவ மனையில் மராமத்து பணிகள் மேற்கொள்ள 60-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். அதிகாரிகள் கூறியதும் சில ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பணிகளை உடனே முடித்துவிடுவோம். பின்னர், அப்பணிக்கான டெண்டரை எடுத்து பணம் பெறுவது வழக்கம்.
பணிகளை செய்யாமல் நாங்கள் செய்து முடித்த பணிகளுக்கான டெண்டரை ஒரு கும்பல் திட்டமிட்டு குறைந்த தொகைக்கு எடுத்து, பின்னர் எங்களிடம் கமிஷன் பெறு வதை இப்போது வழக்கமாக வைத் துள்ளது. நாங்களும் ஏற்கெனவே சொந்த பணத்தில் பணியை முடித்திருப்பதால் 10 சதவீதம் வரை கமிஷன் கொடுத்தோம். நேற்று கமிஷனை தர மறுத்ததால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் எங்களை தாக்கினர்’ என்றார்.