தமிழகம்

வலிய புகட்டும் தண்ணீரால் வதைபடும் ஆடுகள்: விற்பனைக்காக எடையை கூட்டும் மோசடி

சுப.ஜனநாயக செல்வம்

கிராமப்புறங்களில் நடைபெறும் வாரச்சந்தைகளில் ஆடுகள் வாங்க வருவோரை ஏமாற்ற நன்றாக கொழு, கொழுவென இருப்பதுபோன்ற தோற்றத்தை ஆடுகளுக்கு ஏற்படுத்த, அவற்றின் வாயில் தண்ணீரை குழாய் மூலம் வலியப் புகட்டி வியாபாரிகள் சித்ரவதை செய்வதாகப் புகார் எழுந்துள்ளது.

கிராமப்புறங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஆடு, கோழி வளர்ப்புத் தொழில் பிரதானமானது. பருவம் தவறும் மழை, வறட்சி காரணமாக விவசாயம் பொய்த்தாலும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு கைகொடுக்கும். அரசு வழங்கும் வெள்ளாடு வளர்ப்புத் திட்டத்தின்கீழும் பயனாளிகள் பலர் பலனடைந்து வருகின்றனர்.

விழாக்களில் அசைவ விருந்துக்காகவும், பட்டி போட்டு வளர்ப்புத் தொழில் செய்யவும், சந்தைகளைத் தேடி ஆடு வாங்கச் செல்கின்றனர். அவ்வாறு வருவோரை ஏமாற்ற வியாபாரிகள் ஒரு மோசமான தந்திரத்தை கையாளுகின்றனர்.

நோஞ்சான் ஆடுகள் கொழு, கொழுவென இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்த, சந்தைக்கு முந்தைய நாள் இரவில் அல்லது அதிகாலையில் வியாபாரிகள் குழாய் மூலம் ஆடுகளுக்கு தண்ணீரை வலியப் புகட்டுகின்றனர் ஆறு, கண்மாய், குளங்களில் தண்ணீரைப் புகட்டிவிட்டு வாகனங்களில் ஏற்றிவந்து சந்தைகளில் உடனடியாக விற்று விடுகின்றனர்.

எடையை அதிகரித்துக் காட்ட நடக்கும் இந்த மோசடியால், தொழில் முனைவோர் வாங்கிச் செல்லும் இந்த ஆடுகளில் சில வழியிலேயே இறந்து விடுவதுதான் பரிதாபம்.

கண்மாயிலுள்ள கரம்பை மண்ணையும் கலந்து குடித்த ஆடுகள், கழிச்சல் நோய் கண்டு நாளடைவில் செத்துவிடும் அபாயமும் உள்ளது. மேலும், அரசு வழங்கும் வெள்ளாடு வளர்ப்புத் திட்டத்துக்காக, சந்தையில் கொள்முதல் செய்யப்படும் ஆடுகளும் வீடுபோய் சேர்வதற்குள் இறந்து விடுவதால் பயனாளிகள் பலர், இறப்புக்கான காரணம் தெரியாது திகைக்கின்றனர்.

செயல்படாத பிராணிகள் வதை தடுப்புச் சங்கம்

வியாபாரிகள் வணிக நோக்கில் விலங்குகளை வதைக்கும் செயலைத் தடுக்க, மாவட்ட அளவில் உள்ள பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் உள்ளது. இந்தச் சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மாவட்ட எஸ்.பி., மாவட்ட வருவாய் அலுவலர், கால்நடைத்துறை இணை இயக்குநர், நகராட்சி ஆணையர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் ஒரு ஆலோசகர் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கம் பெரும்பாலான மாவட்டங்களில் செயல்படாத நிலையே உள்ளது. இதனால் சித்ரவதைப்படும் விலங்குகள் காப்பாற்றப்படாத நிலை தொடர்கிறது.

இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த வியாபாரி முனியாண்டி கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் நடக்கும் சந்தைகளில், இதுபோன்று தண்ணீரை வலியப் புகட்டி ஆடுகளின் எடையை அதிகரிக்கச் செய்கின்றனர். தென்மாவட்டங்களில் நடக்கும் எல்லா சந்தைகளுக்கும் சென்று வருகிறேன். இதே நிலைதான் உள்ளது.

தொழில் போட்டியால் இதுபோன்று நடத்தப்படுகிறது. இதேபோல் மாடுகளையும் சித்ரவதை செய்து, தகுந்த வசதியின்றி வேன்களில் அடைத்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர். அதையும் தடுக்க வேண்டும்’’ என்றார்.

பிராணிகளை வதைத்தால் பறிமுதல் செய்வோம்

இதுபற்றி கால்நடைத்துறை உதவி இயக்குநர் நாகராஜிடம் கேட்டபோது, “ஆடுகளுக்கு அளவுக்கு அதிகமாக மண் கலந்த தண்ணீரைக் கொடுப்பதால் கழிச்சல் ஏற்பட்டு இறப்பைச் சந்திக்கும். எடையை அதிகரிப்பதற்காக தண்ணீரைப் புகட்டி விற்கிறார்கள் என்பதை விவசாயிகளும் அறிந்துதான் உள்ளனர்.

பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கத்தை செயல்படுத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இனி சந்தைகளில் பிராணிகளை யாராவது வதைத்தால் அவற்றை பறிமுதல் செய்ய உள்ளோம்’’ என்றார்

SCROLL FOR NEXT