ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.வளர்மதி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 13.2.2015 அன்று நடைபெற உள்ள (139) ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, எஸ். வளர்மதி, (திருச்சி மாநகர் மாவட்டக் கழக இணைச் செயலாளர்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் கழக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக 50 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியலில், இ.மதுசூதனன் அவர்கள் கழக அவைத் தலைவர், மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.