கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னையில் நடந்த அரசியல் கூட்டம் தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையில் நேற்று கார்த்தி சிதம்பரம் தலைமையில் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அவர் காங்கிரஸ் தலைவர் குறித்தும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அவதூறாக பேசியதாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து, கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுப்பியுள்ள நோட்டீசில், "சென்னையில் நேற்று நீங்கள் கூட்டிய கூட்டம் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் கூட்டமாக இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் கொள்கை, கட்சியின் தலைமைக்கு எதிரான உங்கள் கருத்துகள் கட்சி விரோத செயல்பாடுகளாகும். கட்சியின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் கூட்டம் நடத்தியதற்காக ஏன் உங்களை கட்சியிலிருந்து நீக்கக்கூடாது?
இது தொடர்பாக வரும் 30-ம் தேதிக்குள் நீங்கள் விளக்கமளிக்க வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களுடன் கார்த்தி சிதம்பரம் நேற்று திடீரென ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
ஜி.கே.வாசன் மீண்டும் தமாகா தொடங்கியதை அடுத்து, ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் தங்களுக்கு காங்கிரஸில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வழங்கப்பட்டது. அப்போதிருந்தே, சிதம்பரம் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களை அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று திடீரென சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். சென்னை ஆந்திரா கிளப்பில் இக்கூட்டம் நடந்தது.