திமுக உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் மற்ற நிர் வாகிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திமுகவின் 14-வது பொதுத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், திமுகவின் புதிய பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 9-ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கவுள்ளது. அன்றைய தினம் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கான தேர்தலும் தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடக்கவுள்ளது.
இந்த தேர்தலில் திமுகவின் உட்கட்சிக்குள் குழப்பம் ஏற்படும், பிரச்சினை உண்டாகும் என்று பலரும் கனவு கண்டிருந்த நிலையில் அது நொறுங்கி போயுள்ளது. திமுகவின் உட்கட்சி தேர்தலில் சென்னை கிழக்கு மாவட்டத்தில் ரெங்கநாதனும், பி.கே.சேகர்பாபுவும் போட்டியிட இருந்தனர். இதில் சேகர்பாபு வெற்றிபெற ரெங்கநாதன் மனமுவந்து விட்டுக்கொடுத்தார்.
வெற்றி பெற்றவர்கள், வாய்ப்பை இழந்தவர்கள், வெற்றி பெற நினைத்து ஒதுங்கியவர்கள் என அனைவரும் உணர்வுபூர்வமாக இணைந்து பணியாற்ற வேண்டும். இதன் மூலம் தான் 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.