சென்னை ஷெனாய் நகரில் கட்டிடம் ஒன்று பூமிக்கு அடியில் 2 அடி இறங்கியது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். மெட்ரோ ரயில் சுரங்கப் பணியால் பாதிப்பா என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் ஷெனாய் நகர் இடையே 5 கி.மீ. தூரம் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் முடிவடைந்ததுள்ளன. இந்த வழித்தடத்தில் தற்போது தண்டவாளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அவசர கால வழி அமைத்தல், மின்சார உபகரணங்கள் பொருத் துதல் போன்ற பணிகள் நேற்று முன்தினம் இரவு நடந்து கொண்டிருந்தன. 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இரவு சுமார் 11.30 மணி அளவில் ஷெனாய்நகர் புல்லா அவென்யூ சாலையும், 8 வது குறுக்கு தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ள இரண்டடுக்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென சுமார் 2 அடி அளவுக்கு பூமியில் புதைந்தது. இதையடுத்து மாடியில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். அருகில் வீடுகளில் வசிப்பவர்களும் பூகம்பம் வந்துவிட்டதாக நினைத்து வெளியே ஓடினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், மெட்ரோ ரயில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கட்டிட சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து அந்த தெருவில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டிடம் தரையிறங்கியது குறித்த செய்தி காலையில் வேகமாக பரவியது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் வந்து கட்டிடத்தை பார்வையிட்டு சென்றனர். சம்பவ இடத்தில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் மெட்ரோ ரயில் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர்
இது தொடர்பாக அந்த கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளரான முருகன் கூறியதாவது:
இந்த வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகி றோம். வீட்டின் முன்புறம் கீழே 4 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. நாங்கள் குடும்பத்துடன் மாடியில் வசித்து வருகிறோம். நான் வெளியூர் சென்றுவிட்டு, இரவு சுமார் 11.30 மணி அளவில் வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்குள் நுழையும்போது பயங்கர சத்தம் கேட்டது. பிறகுதான் கட்டிடம் பூமிக்குள் இறங்கியது தெரிந்தது. உடனடியாக மாடிக்கு சென்று குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வெளியே ஓடி வந்துவிட்டேன். கட்டிடம் கீழே இறங்கியதால், கட்டிடத்தின் சுவர் மற்றும் அடித்தளம் சேதம் அடைந்துள்ளது. கட்டிடத்தின் மேல் பகுதியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் அதிகாரிகள் வந்து சம்பவ இடத்தை பார்த்தனர்.
‘நீங்கள் விரும்பினால், வேறு வீட்டில் குடியிருக்க வாடகை தருகிறோம்’ என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறினர். ‘நாங்கள் இந்த வீட்டிலேயே தொடர்ந்து குடியிருக்கிறோம்’ என்று தெரிவித்துவிட்டோம் என்றார் அவர்.
மெட்ரோ அதிகாரி
மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறும்போது, “கட்டிடம் மண் ணுக்குள் புதைந்தது பற்றி ஆய்வு செய்து வருகிறோம். மெட்ரோ ரயில் பணியால், அந்த கட்டிடம் சேதமடைந் திருந்தால் உரிய இழப்பீடு வழங்கு வோம். அல்லது கட்டிடத்தை சரிசெய்து கொடுப்போம்” என் றனர்.
ஏற்கெனவே இந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணியின் போது, ஒரு கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது. அந்த கட்டிடத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் சரிசெய்து கொடுத்துள்ளது குறிப் பிடத்தக்கது.