சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் நேற்று வெளியிட்டார். அதை கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப்பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் ரிப்பன் மாளிகையில் நேற்று வெளியிட்டார்.
சென்னை மாவட்டத்தில் 4,079 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 13,65,763 ஆண், 14,64,344 பெண், 829 இதரர் என மொத்தம் 28,30,936 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்.27-ம் தேதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது, 11,73,758 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது, 2,51,260 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறுதி பட்டியலில் 1,27,418 ஆண் வாக்காளர்களும், 1,43,053 பெண் வாக்காளர்களும், 829 இதர வாக்காளர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,16,896 வாக்காளர்களும், அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 2,22,792 வாக்காளர்களும் உள்ளனர்.
இந்த இறுதி வாக்காளர் பட்டியல்கள் மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
இதை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களது பெயர் மற்றும் குடும்பத்தாரின் பெயர்கள் குறித்த விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 314 வாக்குச்சாவடி மையங்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 192 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இறுதி வாக்காளர் வெளியீட்டு நிகழ்வில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் க.கற்பகம், வீ.ப.ஜெயசீலன், ம.பிரதிவிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.