தமிழகம்

மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும்: அதிமுகவினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

செய்திப்பிரிவு

மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் உட்பட அதிமுகவின் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டுமென்று, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, 1965 ஜனவரி 25-ம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் காணாத ஒரு மாபெரும் புரட்சியாகும். அந்தத் தியாக வேள்வியில் உயிர் துறந்த மொழிப் போர்த் தியாகிகளுக்கு, வீர வணக்கம் செலுத்துவது நமது விழுமிய கடமையாகும்.

அன்னைத் தமிழுக்காக ஆவி துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜனவரி 25 ஞாயிற்றுக்கிழமையன்று அதிமுக மாணவர் அணி சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதிமுகவில் அமைப்பு ரீதியாக செயல்படும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஊர்வலமாகச் சென்று, அன்னைத் தமிழின் அரும் புகழ் காக்க தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப் போர்த் தியாகிகளின் உருவப் படத்துக்கு வீர வணக்கம் செய்து அஞ்சலி செலுத்த வேண்டும்.

தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தாங்கள் சார்ந்த மாவட்டத்தில் நடைபெறும் வீர வணக்க அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும்.

மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சம்மந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களுடனும், மாவட்ட நிர்வாகிகளுடனும், அறிவிக்கப்படும் மாவட்டங் களிலுள்ள அனைத்து மாணவர் அணி நிர்வாகிகளுடனும், கட்சியின் அமைப்பு ரீதியான அனைத்துப் பிரிவு நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து, வீர வணக்க நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும். நிகழ்ச்சிகளின் விவரத்தை தலைமைக் கழகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT