காந்தி நினைவு தினத்தையொட்டி, சென்னை - சத்தியமூர்த்தி பவனில் நாளை (வெள்ளிக்கிழமை) 'காந்தி' படத்தின் தமிழ் வடிவம் திரையிடப்படவுள்ளதாக, தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேசப்பிதா மகாத்மா காந்தியின் 67-ஆவது நினைவுநாள் அஞ்சலி நிகழ்ச்சி நாளை வெள்ளிக்கிழமை (30.1.2015) காலை 10.00 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், டாக்டர் கே.ஜெயக்குமார், மணிசங்கர் அய்யர், எம். கிருஷ்ணசாமி, டி. யசோதா, குஷ்பு சுந்தர் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள், நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளனர். தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி வாசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும்.
அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும், ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கி, தயாரித்த 'காந்தி" ஆங்கில திரைப்படத்தின் தமிழ் வடிவம் திரையிடப்பட இருக்கிறது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.