காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், காவலர்கள் 66 பேருக்கு முதல்வர் விருதுகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, காவல் துறையினர் மற்றும் என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டார்.
மாவட்டத்தில் சிறப்பாக பணி யாற்றியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலமைக் காவலர்கள் 41 பேருக்கு முதல்வர் பதக்கங்களை ஆட்சியர் வழங்கினார்.
மேலும், மாற்றுத் திறனாளிகள் 5 பேருக்கு காதொலிக் கருவி மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை, வேளாண் துறை, உழவர் பாதுகாப்புத் திட்டம், முன்னாள் படைவீரர் நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் 57 பேருக்கு ரூ. 3,65,239 மதிப்பில் நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட் டத் தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவர் களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் செ. விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத்குமார், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் முத்துமீனாள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் 66-வது குடியரசு தின விழா நேற்று மிக கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், மூவண்ண பலூன்கள் மற்றும் சமாதான புறாக்களை பறக்கவிட்டார். தொடர்ந்து, காவல் துறையினர், தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பிறகு, சுதந்திர போராட்ட தியாகி களை சால்வை அணிவித்தும், பரிசுகள் வழங்கியும் மாவட்ட ஆட்சியர் கவுரவித்தார். தொடர்ந்து, மாற்றுத் திறனாளி குழந்தை களுக்கு இனிப்புகளை வழங்கி னார். அதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார்.
இதில், 25 காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்களும், வருவாய், ஊரக வளர்ச்சி, சுகா தாரம், கல்வி ஆகிய துறைகளைச் சேர்ந்த 62 அலுவலர்களுக்கு சான்றிதழ்களும், வருவாய், முன்னாள் படை வீரர் நலன், மாற்றுத் திறனாளிகள் நலன் உள்ளிட்ட துறைகள் சார்பில் 68 பேருக்கு 14,65,246 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
செங்குன்றம், கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகள், பாதிரிவேடு அரசு மேல்நிலைப் பள்ளி, தாமனேரி உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையம், ஆவடி இமாகுலேட் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தேச பக்தி பாடல்களுக்கான நடனங்கள், தப்பாட்டம் என மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இந்த குடி யரசு தின விழாவில், திருவள்ளூர் எஸ்.பி. சாம்சன், திருவள்ளூர் சார் ஆட்சியர் ராகுல்நாத், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து உள்ளிட்ட மாவட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதேபோல திருவள்ளூர் மாவட் டத்தில் உள்ள நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலக வளாகங்களில் 66-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், பொதுநல அமைப்புகள் சார்பில் ரத்ததானம், மருத்துவ முகாம்கள், விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.