சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வந்தது. அந்த விமானம் மீண்டும் நள்ளிரவு 12.15 மணிக்கு சிங்கப்பூருக்கு செல்ல இருந்தது. அதனால் பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றதும், விமானத்தை சுத்தப்படுத்துவதற்காக பணியாளர்கள் வந்தனர்.
அப்போது ஒரு இருக்கையில் கருப்பு நிற பை இருந்தது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் வந்து, அந்த பையை திறந்து பார்த்தபோது, அதற்குள் 2 கிலோ 600 கிராம் எடையுள்ள 26 தங்க பிஸ்கட்கள் இருந்தன. அவை சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “தங்கத்தை கடத்தி வந்தவர்கள், வெளியே கொண்டு சென்றால் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் விமானத்திலேயே போட்டுச் சென்றி ருக்கலாம். விமானத்துக்குள் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து இந்த பையை போட்டுவிட்டு சென்றவர் யார் என்பது கண்டறியப்படும். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும் என்றனர்.