தமிழகம்

பணி ஓய்வுக்குப் பிறகு அரசு அதிகாரிகள் கட்சிகளில் சேர காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும்: முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா பேட்டி

எஸ்.சசிதரன்

கடந்த மக்களவைத் தேர்தலின் போது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர் நரேஷ் குப்தா. பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் உறுப்பினராக சென்னை கிளையில் பணி புரிந்து வருகிறார்.

தற்காலிகமாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் கிளையில் பணியில் இருக்கும் நரேஷ் குப்தா, ‘தி இந்து’வுக்கு தொலைபேசியில் அளித்த பேட்டி:

கடந்த மக்களவைத் தேர்தலின் போது தமிழகத்தில் நீங்கள் தலை மைத் தேர்தல் அதிகாரியாக இருந் தீர்கள். இந்தத் தேர்தலில் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

தேர்தலில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. பொதுவாகவே, தேர்தலை பெரும்பாலானோர் ஒரு திருவிழா போலத்தான் கருது கிறார்கள். இலவசமாக தரப்படும் பணம், மது, பொருள்கள் போன்ற வற்றின் தாக்கம் இல்லாமல் மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். சாதி, மதம் பார்க்காமல் நேர்மையான வேட்பாளருக்கு ஓட்டு போட வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் ‘நோட்டா’வையும் நாடலாம்.

அரசுப் பணிகளில் இருந்து ஓய்வுபெறும் அதிகாரிகள், அரசியல் கட்சிகள் சேருகிறார்கள். நீங்களும் சேருவீர்களா?

அரசியல் கட்சிகளில் சேருவது நல்லதா, தவறானதா என்பதைச் சொல்ல மாட்டேன். அது அவரவர் உரிமை. ஆனால், அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெறுபவர்கள், உடனே அரசியல் கட்சியில் சேர்ந்தால், அவர்கள் பணியில் இருக்கும்போது அக்கட்சிக்கு சாதகமாக இருந்தார்களோ என்ற எண்ணத்தை மற்றவர்கள் மனதில் ஏற்படுத்தக் கூடும். இதுபோன்ற வீண் சந்தேகங்களை தவிர்க்க, பணியில் இருந்து ஓய்வுபெறும் அதிகாரிகள் குறைந்தது 2 அல்லது 5 ஆண்டுகளுக்குள் கட்சியில் சேரக்கூடாது என்ற விதிமுறைகளை உருவாக்கலாம்.

அரசு அதிகாரிகள், கட்சிகளில் சேர்ந்து பதவி பெறுவது தவறா, இல்லையா?

மகாத்மா காந்தி பெரிய பதவியை வகித்ததில்லை. மக்களுக்கு சேவை செய்ய பதவியில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்பது என் கருத்து.

சமீபகாலங்களில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து உள்ளதே?

வாக்குப்பதிவு மிக மிக அதிகமாக இருக்கும்போது அது ஆர்வமிகுதியால் இருந்தால் சரி. பணம், பொருள் பெற்றதன் காரணமாக இருந்துவிடக் கூடாது. மிதமிஞ்சிய வாக்குப்பதிவு ஆராயப்பட வேண்டிய விஷயம்.

வாக்காளர்களில் சிலர் பணம் வாங்குவதை தவறாக நினைக்க வில்லை போலிருக்கிறதே?

தேர்தலின்போது தரப்படும் இலவசங்கள், ஆகாயத்தில் இருந்து சாலையில் விழுந்த பரிசு போன்றது. சாலையில் பணமோ, பொருளோ கிடந்தால் அதை எடுக்க யாரும் தயங்கமாட்டார்கள். அதுபோலத்தான், தேர்தலின் போதும் வருவதை ஏன் விடுவது என்று பலர் கருதுகின்றனர்.

ஓட்டுக்காக வாக்காளர்கள் பணம் வாங்குவதை கட்டுப்படுத்தவே முடியாதா?

100 சதவீதம் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியா செல்வந்தர்கள் நாடாக மாறினால் ஒருவேளை மாறக்கூடுமோ என்னவோ.

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை அரசியல்வாதிகள் விமர்சிக்கிறார்களே?

பொதுக்கூட்டங்களில் வேட்பா ளர் பெயரைச் சொல்லி தலைவர் கள் ஓட்டு கேட்டால், அந்தக் கூட் டத்துக்கான செலவு வேட்பாளர் கணக்கில்தான் சேரும். இது பழைய விதிதான். தேர்தல் ஆணை யம், விதிகளை கடுமையாக அமல்படுத்தும்போது இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும்.

உங்களுக்குப் பிறகு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவிக்கு வந்துள்ள பிரவீண்குமார் எப்படி செயல்படுகிறார்? அவர் சிறப்பாகவே செயல்படுகிறார்.

இவ்வாறு நரேஷ் குப்தா கூறினார்.

SCROLL FOR NEXT