முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று முன்தினம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘திமுக திருந்த வேண்டும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என திமுகவை விமர்சித்து பேசினார்.
இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மு.க.அழகிரி கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவர் திமுக உறுப்பினர் இல்லை. எனவே திமுகவை பற்றி பேசுவது அவருக்கு அழகல்ல. திமுகவை தாறுமாறாக பேசியிருப்பது தொண்டர் களை வேதனையடையச் செய்துள்ளது. திமுகவில் உள்ளவர்கள் திருடர்கள் என்று அவர் சொன்னால் அவர் தான் திருந்த வேண்டும்.
திமுக உட்கட்சி தேர்தலில் ஏதாவது குழப்பம் வரும் என அழகிரி எதிர்பார்த்தி ருந்தார். ஆனால் குழப்பம் ஏதும் வராத நிலையில் அவர் விரக்தியின் விளிம்பில் நின்று பேசியுள்ளார். திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு முகவரி இல்லை என்று கூறியுள்ளார். தனக்கு முகவரி உள்ளதாக காட்டிக்கொள்ளவே முரண்பாடாக பேசுகிறார்.
திமுக தொண்டர்கள், முன்னோடிகள் மட்டுமன்றி அனைத்துக்கட்சி தலைவர் களும் ஸ்டாலினை அங்கீகரிக்கப்பட்ட தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்டனர். அவரது வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாமல்தான் அழகிரி இப்படி பேசியுள்ளார். அழகிரியை திமுகவுக்கு அழைக்க வேண்டிய அவசியமே இல்லை. திமுக மலிவான கட்சி கிடையாது. யாரையும் அழைக்கும் பழக்கம் இல்லை, வந்தாரை வாழ வைக்கும் இயக்கம், அவ்வளவுதான். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.