காஞ்சிபுரம் நகரில் முதற்கட்டமாக ரூ.23 கோடியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசு 2014, நவம்பரில் பல்வேறு மாநிலங்களில் உள்ள அஜ்மீர், லால் அமிஸ்டர், துவராக, கயா, வாரங்கால், பூரி, காஞ்சிபுரம், மதுரா, வாரணாசி, வேளங்கண்ணி போன்ற நகரங்களைப் பாரம்பரிய மிக்கவையாக அறிவித்தது.
தொடர்ந்து, அந்தந்த நகரங் களின் சிறப்புக்கேற்ப மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அங்கு ஏற்கெனவே உள்ள அடிப்படை வசதிகள், மேம்படுத்த வேண்டிய வசதிகள் ஆகியன குறித்து அந்தந்த நகர மக்களிடம் கருத்து கேட்டு, அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அறிக்கை பெறப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் நகரில் தேசிய பாரம்பரிய மேம்பாடு மற்றும் அபிவிருத்தி யோஜனா திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக ரூ.23 கோடியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட நகராட்சி மண்டல இயக்குநர் பிரேமா கூறியதாவது:
பாரம்பரியமிக்க நகர மாக காஞ்சிபுரம் அறிவிக்கப்பட் டதையொட்டி, இங்கு சுற்றுலாவை மேம்படுத்தவும், கோயில் மற்றும் நகர்ப் பகுதிகளை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், பொது மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளான பொதுக் கழிப்பிடம், யாத்ரீகர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ரூ. 23 கோடியில் இந்தப் பணிகளை மேற்கொள்ள மத்திய நகர்ப்புற அமைச்சர் வெங்கைய நாயுடு அனுமதி ஆணைக் கடிதம் வழங்கியுள் ளார். எந்தெந்தப் பணிகள், எவ்வளவு திட்ட மதிப்பில் மேற்கொள்வது உள்ளிட்ட விவரங்கள், நகராட்சி ஆணையர் தலைமையில் அலுவலர்கள் ஆலோசனை நடத்தி, பின்னர் அறிவிப்பார்கள் என்றார்.