தமிழகம்

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.400 கோடி நிலுவைத்தொகை கிடைக்க நடவடிக்கை: அரசுக்கு இளங்கோவன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழக கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை உடனடியாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகத்திடம் இருந்து சுமார் ரூ.400 கோடி நிலுவைத்தொகை வரவேண்டி உள்ளது. சர்க்கரை விலை தமிழகத்தில் ஒரு கிலோ ரூ.34 ஆக உள்ளது. ஆனால், வெளி மாநிலத்தில் ரூ.24-க்கு விற்கப்படுகிறது. இந்நிலையிலும் நிலுவைத் தொகையை வழங்க முடியவில்லை என்று ஆலை நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, கரும்பு விவசாயிகளுக்கு செலுத்த ரூ.6,600 கோடி வழங்கியது. ஆனால், தற்போதைய பாஜக அரசு கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை கேட்கத் தயாராக இல்லை.

உர விலை, விதை, வெட்டுக்கூலி உயர்வு, போக்குவரத்து செலவு உயர்வு, தொடர் வறட்சி, மின்வெட்டு காரணமாக கரும்பு விவசாயிகள் சுமார் 3 லட்சம் ஏக்கர் கரும்பு சாகுபடி செய்வதை தவிர்த்து வேறு பயிர்களுக்கு மாறியுள்ளனர். இந்நிலை நீடித்தால், கரும்பு விவசாயமே அழிந்துவிடும்.

எனவே, தமிழக கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை செலுத்த தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை அணுகி நிதியைப் பெற்றுத்தர முயற்சி செய்ய வேண்டும். மேலும், சர்க்கரைக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத மதிப்புக் கூட்டு வரியை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT