ஆரவாரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக் காட்சி நாளையுடன் நிறைவுபெறுகிறது.
லட்சக் கணக்கானோர் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கிக் குவித்ததுடன், தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்குப் பரிசளிக்கவும் புத்தகங்களை வாங்கிச் சென்றிருக்கிறார்கள். நாள் தவறாமல் புத்தகக் காட்சிக்குச் செல்பவர்கள் ஏராளம்.
புத்தகங்களை வாங்குவதைப் போலவே, புத்தகங்களைக் காதலுடன் வாங்குபவர்களைப் பார்ப்பதும் பெரும் ஆனந்தம் அல்லவா. சென்னை புத்தகக் காட்சியில் புத்தகங்களை வாங்குவதற்காக ஆண்டு முழுவதும் பணத்தைச் சேமிப்பவர்கள் உண்டு. அவர்களைப் பொறுத்தவரை புத்தகக் காட்சியில் தரப்படும் 10% கழிவு என்பது ஒரு வரப்பிரசாதம். இதுபோன்ற புத்தகக் காதலர்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் சங்கமித்த அறிவுத் திருவிழா, நாளையுடன் நிறைவுபெறுகிறது. 700 அரங்குகள், ஐந்து கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பல லட்சம் வாசகர்கள்! இருந்தும் வாசகர்களுக்கு வாங்கித் தீரவில்லை.
புத்தகக் காதலர்கள் பலருக்கும் கூட்டம் என்பது ஒரு பிரச்சினையாக இருந்துவருகிறது. நிதானமாகப் புத்தகங்களைப் பார்வையிட்டு வாங்க முடியவில்லை என்று அவர்கள் இனிமேல் கவலைப்பட வேண்டாம். கூட்டம் நிரம்பி வழிந்த விடுமுறை நாட்கள் முடிந்துவிட்டன.
வார நாட்களும், கடைசி இரண்டு நாட்களுமான இன்றும் நாளையும் கூட்டம் குறைவாகவே காணப்படும். புத்தகங்களைத் தேடித் தேடி வாங்கப் போதுமான நேரம் கிடைக்கும் என்பதால், புத்தகக் காதலர்கள் இதைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். சென்னையில் ஆண்டுக்கொரு முறை நிகழும் இந்த அறிவுத் திருவிழாவில் புத்தகப் புதையல் களை அள்ளிக்கொள்ளக் கூட்ட நெரிசல் ஒரு தடையாக இருக்கக் கூடாது. முந்திக்கொள் ளுங்கள் வாசகர்களே… இன்னும் இரண்டே நாட்கள்தான்!