தமிழகம்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் உட்பட 29 பேர் போட்டி: வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிடுகின்றனர்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் பிப்ரவரி 13-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி, ஜனவரி 19 முதல் 27-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் மற்றும் சுயேச்சைகள் என 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்கள் பரிசீலனை 28-ம் தேதி நடைபெற்றது. இதில் 34 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தேர்தல் ஆணைய விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றித் தாக்கல் செய்யப்படாத 12 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. சுயேச்சை வேட்பாளர்கள் என்.பி.ரவிசங்கர், க.சிவராஜ், த.சுரேஷ், வீ.தங்கவேல், ம.பெரியசாமி ஆகிய 5 பேர் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, 29 வேட்பாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் சார்பில் கே.அண்ணாதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), என்.ஆனந்த் (திமுக), எம்.சுப்ரமணியம் (பாஜக), எஸ்.வளர்மதி (அதிமுக) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் வெ.பாண்டியன்(எழுச்சித் தமிழர்கள் முன்னேற்றக் கழகம்), ர.ஜேம்ஸ் பால் (அகில இந்திய ஆதித்தனார் மக்கள் கட்சி), பி.ஹேமநாதன் (ஐக்கிய ஜனதா தளம்) ஆகியோரும் 22 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்களுக்குச் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வி.மனோகரன் நேற்று அறிவித்தார்.

திமுகவுக்குப் புதிய தமிழகம் ஆதரவு

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி, திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் எஸ்.கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திமுக வேட்பாளரைப் பொது வேட்பாளராக ஏற்க வேண்டும் என்ற கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றுத் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். இந்த ஆதரவு 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் தொடருமா என்பது குறித்துத் தற்போது எதுவும் கூற முடியாது” என்றார்.

SCROLL FOR NEXT