தமிழகம்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பண பலம், ஆள் பலத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்: தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதி

செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணபலம், ஆள் பலத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. அங்கு அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இவர்களைத் தவிர மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 50 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற 30-ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

பார்வையாளர்கள் கண்காணிப்பு

இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தலையொட்டி நியமிக்கப்பட்ட சிறப்புப் பார்வையாளர்கள், தொகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

தேர்தல் பணிகள் தொடர்பான புகார்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். தேர்தல் ஆணை யத்தின் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலமாகவும் புகார் அளிக்கலாம். தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரது அலுவலகங்களையும் அணுகலாம்.

523 விளம்பரங்கள் அகற்றம்

தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் ஆதாரத்துடன் புகார் கூறினால், நடவடிக்கை எடுக்கப்படும். புகார்களின் அடிப்படையில் அரசு கட்டிடங்களில் செய்யப்பட்ட 10 தேர்தல் விளம்பரங்கள், தனியார் கட்டிடங்களில் 490 சுவர் விளம்பரங்கள், 2 சுவரொட்டிகள், 12 விளம்பரப் பதாகைகள், 19 இடங்களில் கொடிகள் என மொத்தம் 523 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

32 மண்டல குழுக்கள்

எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் ‘நோட்டா’வுக்கு வாக்களிப்பதற்கான பொத்தான், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியாக இருக்கும். போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டு தனிப் பட்டியல் தயாரிக்கப்படும். இப்பட்டியலில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியாது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் பணபலம், ஆள் பலத்தை பயன்படுத்துவதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் மாவட்ட ஆட்சியர் பழனிகுமார், பொதுப் பார்வையாளர் பல்கார் சிங், செலவுக் கணக்கு பார்வையாளர் ஸ்ரீதர தோரா, போலீஸ் பணிகள் பார்வையாளர் வினோத்குமார், தேர்தல் அதிகாரி மனோகரன் ஆகியோருடன் 32 மண்டலக் குழுக்கள், 10 பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.

SCROLL FOR NEXT