தமிழகம்

நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் அறிவியல் வளர்ச்சிக்கு உதவும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு

செய்திப்பிரிவு

தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப் பட உள்ள இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தால், நாட்டின் அறிவியல் வளர்ச்சி மேம்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு சார்பில் தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் ரூ.1,500 கோடி செலவில் இந்திய நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது முக்கியமான அறிவியல் திட்டமாகும். பிரபஞ்சத்தின் கட்டமைப்பை அறிந்துகொள்ள உதவும் இத்திட்டத்தால் இந்திய அறிவியல் வளர்ச்சிக்கும் நாட் டுக்கும் பல பயன்கள் உண்டு.

நியூட்ரினோ என்பது ஒரு அடிப்படை துகளாகும். இதன் குணங்களை அறிவதே இத் திட்டத்தின் நோக்கம். அதை அறிவதன் மூலம் சூரியனைப் பற்றியும் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்தும் அறிந்துகொள்ள முடியும். 200 விஞ்ஞானிகளும்,26 அறிவியல் நிறுவனங்களும் இதில் ஈடுபடவுள்ளனர்.

இத்திட்டத்தின் வரைவு, நம் நாட்டின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.

இத்திட்டத்தை நிறைவேற்று வதன் மூலம் நாட்டின் அறிவியல் வளர்ச்சி இயற்பியல் துறையில் மேம்படும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது. இத்திட்டத்துக்கு கையகப்படுத்தும் 34 ஹெக்டேர் நிலம் பெரும்பாலும் புறம்போக்கு நிலம்தான். தேனி மாவட்ட வளர்ச்சிக்கு இத்திட்டம் பங்களிக்கும்.

மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வை மேம்படுத்த உதவும். நாட்டின் அறிவியல் தற்சார்புக்கு உதவும் நியூட்ரினோ திட்டத்தை தேனி மாவட்டத்தில் அமைப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. மக்களின் ஆதர வோடும், ஒத்துழைப்போடும் இத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT