தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். இதன் பின்னணியில் தேமுதிக புதிய தேர்தல் வியூகத்தை வகுக்கவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக நலன் சார்ந்த பொதுப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறார்.
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுடன் நேர்காணல், கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என மும்முரமாக இருக்கும் விஜயகாந்த் திடீரென மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி பிரதமரை சந்திக்கவிருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய தேமுதிக-வின் முக்கியப் பிரமுகர், “கடந்த இரு நாட்களுக்கு முன்பு, பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு அவரது அலுவலகத்தை தொடர்பு கொண்டோம். விரைவில் நேரம் ஒதுக்கப்படும் என்றார்கள்.
அநேகமாக வரும் 14-ம் தேதி சந்திப்பு நடக்கலாம். கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுடன் பிரதமரைச் சந்திக்கும் விஜயகாந்த், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது, கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கான உரிமை, ஈழத் தமிழர் பிரச்சினை, காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம், முல்லைப் பெரியாறு பிரச்சினை, மின்வெட்டுப் பிரச்சினை ஆகியவை குறித்து விரிவாக பேசவிருக்கிறார்” என்றார்.
மக்கள் பிரச்சினைக்கான சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும் இந்த சந்திப்பின்போது தேர்தல் கூட்டணி குறித்தும் முக்கியமான சில விஷயங்களை விஜயகாந்த் பேசவிருப்பதாக தேமுதிக வட்டாரத்தில் தகவல் சொல்லப்படுகிறது.
பிரதமரைச் சந்திப்பதன் மூலம், தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்வது, தேமுதிக-வுக்கு கெடு விதித்த பாஜக-வுக்கும் அவர்களுக்கு ஆதரவாக தன்னைத் தாக்கிப் பேசிய தமிழருவி மணியனுக்கும் பதிலடி கொடுப்பது,
மூன்றாவதாக, காங்கிரஸ் கூட்டணியில் திமுக-வையும் சேர்ப்பதற்கான வேலைகளை முடுக்கிவிடுவது என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கப் பார்க்கிறார் விஜயகாந்த் என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.