தமிழகம்

பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: எங்கே போனார் மதுரை அட்டாக் பாண்டி?- 2 ஆண்டுகளாகத் தேடும் போலீஸ்

கே.கே.மகேஷ்

மதுரை திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டு நாளையுடன் (31-ம் தேதி) 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால், இந்த வழக்கின் முதல் குற்றவாளியான அட்டாக் பாண்டி இன்னமும் கைது செய்யப்படவில்லை.

மு.க.அழகிரியின் நண்பராக இருந்த பொட்டு சுரேஷ், கடந்த திமுக ஆட்சியின்போது அரசு வட்டாரங்களில் அதிகாரமிக்க நபராக வலம் வந்தவர். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா உள்ளிட்டோரால் ‘தென் தமிழகத்தின் துணை முதல்வர்’ என்று விமர்சிக்கப்பட்டவர்.

ஆட்சி மாறியதும், அடுத்தடுத்து பாய்ந்த வழக்குகள் காரணமாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டு பின்னர் வெளியே வந்தார்.

அழகிரியின் பிறந்த நாளையொட்டி அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த அடுத்த நாளே அதாவது, 31.1.2013 அன்று அழகிரி வீட்டருகே உள்ள சாலையிலேயே பொட்டு சுரேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடலில் 37 வெட்டுக் காயங்கள் இருந்தன.

கொலையாளிகளைப் பிடிக்க மாநகர காவல் துணை ஆணையர் சமந்த்ரோஹன் ராஜேந்திரா தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலை நடந்த 2-வது நாளில், அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்கள் 7 பேர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அட்டாக் பாண்டியின் அக்காள் மகன் விஜயபாண்டி, கூட்டாளி ஆரோக்கிய பிரபு ஆகிய இருவருக்கும் கொலையில் தொடர்பு இருப்பதாக போலீஸுக்கு தெரியவர, அவர்கள் இருவரும் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

‘அட்டாக் பாண்டியை கொல்ல பொட்டு திட்டமிட்டார்; நாங்கள் முந்திக் கொண்டோம்’ என்று வாக்குமூலம் கூறிய இவர்கள், கொலைக்கு முன் சென்னையில் மு.க.ஸ்டாலினை அட்டாக் பாண்டி சந்தித்ததாகவும், தொடர்ந்து, அழகிரி மகன் தயாநிதி அட்டாக் பாண்டியை சந்தித்ததாகவும் கூறியிருந்தனர். எனவே, இந்த வழக்கில் ஸ்டாலின் அல்லது அழகிரியின் பெயர் சேர்க்கப்படுமா என்றெல்லாம் பரபரப்பு கிளம்பியது.

இறுதியில் அட்டாக் பாண்டியின் தனிப்பட்ட விரோதம்தான் கொலைக்கு காரணம் என்ற முடிவுக்கு வந்த போலீஸார், 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இன்றுவரை அட்டாக் பாண்டியை போலீஸால் நெருங்க முடியவில்லை. தலைமறைவான அட்டாக் பாண்டியை வெளியே கொண்டு வரும் நோக்கில் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்காததால், அவரது சொத்துகளையும், வங்கிக் கணக்கையும் முடக்கிய போலீஸ், கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றம் மூலம் தேடப்படும் குற்றவாளியாக அட்டாக் பாண்டியை அறிவித்தது.

பண பலம் படைத்த ஒருவரின் உதவியுடன் வெளிநாட்டில் அட்டாக் பாண்டி செட்டில் ஆகிவிட்டதாகவும், பொட்டு சுரேஷால் பாதிக்கப்பட்ட போலீஸாரால்தான் அட்டாக் பாண்டி இன்னும் பிடிபடாமல் உள்ளார் என்றும் தகவல்கள் பரவிக் கிடக்கின்றன.

தெய்வம் நின்று கொல்லும்

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் போலீஸாரின் நடவடிக்கை குறித்து அவரது அண்ணன்கள் என். அசோகன், என். குமார் ஆகியோரிடம் கேட்டபோது, ‘கொலையாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பலாம். தெய்வத்திடமிருந்தும், இயற்கையிடமிருந்தும் தப்பிக்க முடியாது. கொலையில் சம்பந்தப்பட்ட சிலரை இப்போதே தெய்வம் தண்டிக்க ஆரம்பித்துவிட்டது கண்கூடாகத் தெரிகிறது’ என்றனர்.

பொட்டு சுரேஷின் தம்பியும் வழக்கறிஞருமான என். சரவணன், ‘போலீஸ் தரப்பிலிருந்து ஓராண்டுக்கு மேலாக எந்தப் பதிலும் இல்லை’ என்றார்.

தலைமறைவு ஏன்?

வேளாண் விற்பனைக் குழு முன்னாள் மண்டல தலைவரான அட்டாக் பாண்டி, கொலைச் சம்பவத்தின்போது திமுக தொண்டரணி மாவட்ட அமைப்பாளராக இருந்தார். அவரது உறவினர் ஒருவரிடம் பேசியபோது, ‘நியாயப்படி விசாரணை நடக்கும் என்றால், அட்டாக் பாண்டி எப்போதோ சரணடைந்திருப்பார். அவரை சுட்டுக் கொல்ல போலீஸார் திட்டமிட்டிருப்பதால்தான் தலை மறைவாகிவிட்டார் என்றார்.

SCROLL FOR NEXT