தமிழகம்

செயற்கை கரை அமைத்து குவாரிக்காக ஆறு இரண்டாகப் பிளப்பு: சகாயத்திடம் கிராம மக்கள் புகார்

எஸ்.ஸ்ரீனிவாசகன்

கிரானைட் குவாரிக்காக செயற் கையாக கரை அமைத்து ஆற்றையே இரண்டாகப் பிளந்திருந்ததை கண்டுபிடித்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அதிர்ச்சியடைந்தார்.

மதுரை மாவட்டத்தில் நடை பெற்றுள்ள கிரானைட் முறைகேடு குறித்து உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் ஆய்வு செய்து வருகிறார். 4-வது கட்டமாக மேலூர் அருகே இ.மலம்பட்டியை சுற்றியுள்ள குவாரிகளை நேற்று ஆய்வு செய்தார்.

சிதைந்தும், அழிந்தும்போன எரிச்சிகுளம், பிள்ளையார்குளம், இடையன்கண்மாய், சொஸ்தினி கண்மாய், குசலான்குளம் மற்றும் ஓடை, கால்வாய்களை அவர் பார்வையிட்டார். கீழவளவில் உள்ள சிறுமாணிக்கம் கண் மாயில் கிரானைட் கழிவுக் கற்களைக் கொட்டி மூடிவிட்டனர். கால்வாயும் அடைக்கப்பட்டதால், கீழ்புறமுள்ள 20-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்குப் பெரியாறு பாசன நீர் பல ஆண்டுகளாக செல்லவில்லை.

இதனால் மலம்பட்டியில் மட்டும் 595 ஏக்கராக இருந்த விவசாயம் 61 ஏக்கராக குறைந்துவிட்டது. இப்பகுதியை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய பரப்பு 90 சதவீதம் குறைந்துபோனதாக வருவாய், பொதுப்பணித் துறையினர் தெரிவித்ததை கேட்டு சகாயம் திகைத்துப் போனார்.

பின்னர் சின்ன மலம்பட்டி வழியாக செல்லும் மணிமுத்தாறை பார்வையிட்டார். நத்தத்தில் இருந்து வரும் இந்த ஆறு சிவகங் கையைக் கடந்து ராமநாதபுரம் வரை செல்கிறது. 90 மீட்டருக்கும் அதிக அகலம் கொண்ட இந்த ஆறு சிறிதாக இருந்ததால் சகாயத்துக்கு சந்தேகம் எழுந்தது.

ஆவணங்களை ஆய்வு செய்ததுடன், அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார். இதில் கிடைத்த தகவல்களை கேட்டு சகாயம் அதிர்ச்சியடைந்தார். பிஆர்பி கிரானைட் நிறுவனம் ஆற்றின் அருகே குவாரி நடத்தியது. வெள்ள காலத்தில் தண்ணீர் குவாரிக்குள் புகாமல் தடுக்க, ஆற்றின் நடுவில் குவாரி கழிவு கற்கள், மண்ணை கொட்டி புதிய கரையை அமைத்து ஆற்றையே இரண்டாகப் பிளந்துவிட்டனர்.

இதனால் தண்ணீர் ஒரு பக்கம் மட்டும் செல்ல, மறுபக்கம் ஆற்றுக்குள்ளேயே கிரானைட் கற்களை பல இடங்களில் வெட்டி எடுத்துவிட்டனர். மேலும் கிரானைட் கழிவுகளை மலை அளவுக்கு கொட்டி ஆற்றில் தண்ணீரின் போக்கையே மாற்றி யிருந்ததையும் சகாயம் பார்வை யிட்டார்.

மலம்பட்டியைச் சேர்ந்த சோம சுந்தரம், சின்னையா, கல்லாணை உட்பட பலரும் சகாயத்திடம் ஆற்றின் நிலை குறித்து புகார் தெரிவித்தனர். இந்த அளவுக்கு நீர்நிலைகள் சேதப்படுத்தியது குறித்து அறிக்கையோ, நடவடிக் கையோ உண்டா என அதிகாரி களிடம் சகாயம் கேட்டார். இதற்கு பொதுப்பணி, வருவாய், கனிமவளம் உள்பட பல்வேறு துறையினரும், 2012-க்கு முன்பு எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர். ஏன் எடுக்கப்படவில்லை என சகாயம் கேட்டதற்கு, பதில ளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

பாதுகாப்பு வளையத்தில் சகாயம்

சகாயத்துக்கு ஆபத்து ஏற்பட லாம் எனத் தகவல் வெளியா னதால் காவல் துணை கண்காணிப் பாளர் பஞ்சாட்சரம் தலைமையில் ஏராளமான போலீஸார் பாது காப்புப் பணியில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT