திருத்தியமைக்கப்பட்ட தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு சாதகமற்ற அம்சங்கள் உள்ளதால், தற்போது நடைமுறையிலுள்ள தேசிய பயிர் காப்பீடு திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமென்று, மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் மாநில வேளாண் துறை அமைச்சர்களின் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றுப் பேசியதாவது:
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள திருத்தியமைக்கப்பட்ட தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் இழப்பீடு, குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாக உள்ளது. தமிழ்நாட்டு விவசாயி களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு அம்சத்தால் பயனில்லை.
இதில் தவணைத் தொகை வணிக ரீதியில் கணக்கிடப்படுவதால், தவணை கட்டணம் மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. அதிக இடர் நிலவும் மாவட்டங்களில் காப்பீட்டுத் தொகை குறைவாக உள்ளது. அதிகமாக உள்ள காப்பீட்டுத் தொகையை மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று, கடந்த 2014ம் ஆண்டே, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் இழப்பீடு தொகை அதிகமாக வழங்கப்பட்டிருக்கும்.
ஆனால் பிரீமியத் தொகையை அவர்களால் அதிகம் செலுத்த இயலாது. மேலும் காப்பீடுத் தொகை நிர்ணயிக்கப்படும் கடன் தொகைக்கு குறைவாக உள்ளது.
எனவே புதிய தேசிய பயிர் வருவாய் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் என்பதால், இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக வேளாண்துறை செயலர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் ராஜேஷ் லக்கானி, வேளாண் துறை இயக்குநர் டாக்டர் எம்.ராஜேந்திரன் மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.