தமிழகம்

சுவீகாரத்தை ரத்து செய்கிறார் எம்.ஏ.எம்.: பங்காளிகளிடம் தீர்மானத்தில் ரகசிய கையெழுத்து

குள.சண்முகசுந்தரம்

தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியின் சுவீகாரப் புதல்வர் முத்தையாவை சுவீகாரம் எடுத்தது செல்லாது என எம்.ஏ.எம்-மின் பங்காளி முறை உறவினர் களிடையே ரகசிய தீர்மானம் கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது.

சுவீகார புதல்வர் முத்தையாவால் பல்வேறு சங்கடங்களை எதிர்கொண்டு வரும் எம்.ஏ.எம்.ராமசாமி, முத்தையாவி டம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்கு முன்னதாக முத்தையாவை சுவீகாரம் எடுத்ததை குல வழக்கப்படி ரத்து செய்வதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெறுகிறது.

சுவீகார புதல்வர் முத்தையா சிவகங்கை மாவட்டம் ஒக்கூரைச் சேர்ந்தவர். இவர் இளையாற்றங்குடி சிவன் கோயிலுக்கு கட்டுப்பட்ட கழனி வாசல் பிரிவைச் சேர்ந்தவர். இதே கோயிலின் பட்டிணசாமி பிரிவைச் சேர்ந்தவர் எம்.ஏ.எம்.ராமசாமி. ஒரு பிரிவைச் சார்ந்தவர்கள் அதே பிரிவுக்குள் தான் சுவீகாரம் கொடுக்கவும் எடுக்கவும் முடியும். மற்ற பிரிவைச் சேர்ந்தவர்களோடு திருமண பந்தம்தான் ஏற்படுத்திக் கொள்ளமுடியும். ஆனால், பட்டிணசாமி பிரிவைச் சேர்ந்த எம்.ஏ.எம்., கழனிவாசல் பிரிவைச் சேர்ந்த ஐயப்பனை (முத்தையா) குலவழக்கத்தை மீறி சுவீகாரம் எடுத்திருந்தார்.

இப்போது அவரைச் சுவீகாரம் எடுத்ததை குல வழக்கப்படி ரத்து செய்யும் முயற்சியில் எம்.ஏ.எம்., இறங்கி இருக்கிறார். அவருக்காக களத்தில் இறங்கி இருக்கும் செட்டியார் சமூகத்து வி.ஐ.பி-க்கள் சிலர் கடந்த சில நாட்களாக செட்டிநாட்டுப் பகுதியில் உள்ள பட்டிணசாமி பிரிவு நகரத்தார்களிடம் இதுகுறித்த தீர்மானத் தில் கையெழுத்துப் பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய பட்டிணசாமி பிரிவினர், ‘ஐயப்பனின் சுவீகாரத்தை ரத்து செய்து அவரை தலைக்கட்டுப் புள்ளியிலிருந்து தள்ளி வைக்கிறோம். அவருக்குப் பதிலாக இன்னொரு வரை எம்.ஏ.எம். வாரிசாக சுவீகாரம் எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளிக்கிறோம்’ என்று தீர்மானம் எழுதி 75 ஊர்களிலும் உள்ள எங்கள் பிரிவின் காரியக்கமிட்டி உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது.

அனைவரிடமும் கையெழுத்து பெற்றதும் பிப்ரவரி மாதம், பட்டிணசாமி பிரிவைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேரும் செட்டிநாட்டில் கூடி, ஐயப்பனின் சுவீகாரம் ரத்து செய்யப்பட்டதை முறைப்படி அங்கீகரிக்க இருக்கிறார் கள்’’ என்றார்கள். முத்தையாவின் சுவீகாரத்தை ரத்து செய்ய எம்.ஏ.எம்.ராமசாமி எடுத்துவரும் நடவடிக்கைக் குறித்து முத்தைய்யாவின் கருத்தைக் கேட்க முயற்சித்தபோது, அவர் வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது. தொடர்ந்து அவருடைய கருத்தைக் கேட்க முயற்சித்து வருகிறோம்.

SCROLL FOR NEXT