கோவையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை 1.20 கோடியாக அதிகரிக்க வேண்டும். மேலும், கட்சியில் மெத்தனமாக இருக்கும் மாவட்ட நிர்வாகிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு சுமார் 40 நிமிடங்கள் பேசினார். கட்சியின் தலைமை நிர்வாகிகள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், அணி செயலாளர் கள், அணி துணை செயலாளர் கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் உட்பட மொத்தம் 1500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாஜக கூட்டணியில் தேமுதிக நீடிப்பது பற்றி முக்கிய முடிவு எடுத்து விஜயகாந்த் அறிவிப்பார் என நிர்வாகிகள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
ஆனால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசும்போது, ‘‘கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டிய நேரம் இல்லை. அடுத்த செயற்குழு கூட்டத்தில் பேசலாம். கட்சியை வலுப்படுத்தும் வகை யில் ஒவ்வொரு நிர்வாகியும் செயல்பட வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் தேமுதிகவின் உறுப்பினர்கள் சேர்க்கையை வலுப்படுத்த வேண்டும். மேலும், மாவட்ட பொறுப்புகளில் இருப் பவர்கள் கட்சிப் பணியில் மெத்தனமாக இருக்கக் கூடாது. மெத்தனமாக இருப்பது உறுதி செய்யப்பட்டால் வரும் பொங்கல் முதல் அவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அவர் எச்சரிக்கை விடுத் துள்ளார்.
இது தொடர்பாக தேமுதிகவின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
வரும் 2016-ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு முக்கியமானதாக இருந்தது. கட்சியில் வளர்ச்சிப் பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பஞ்சாயத்து, நகரம், மாவட்டங்கள் என ஆங்காங்கே உள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர், சாலை வசதி, மருத்துவ வசதிகள் உள் ளிட்டவைகளை கையில் எடுத்து தேமுதிக நிர்வாகிகள் முன்நின்று போராட்டங்கள் நடத்த வேண்டும். லஞ்சம், ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
தற்போதுள்ள 60 லட்சம் என்ற உறுப்பினர்களின் எண் ணிக்கையை வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் இரண்டு மடங்கு ஆக்க அதாவது 1.20 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு பூத்களிலும் தேமுதிகவின் உறுப் பினர் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்புகளை வைத் துக் கொண்டு கட்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் இருக்கும் நிர்வாகிகளை பார்த்துக் கொண்டு வருகிறோம்.
இதே நிலை தொடர்ந்தால் வரும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அவர்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கட்சியின் தற்போதுள்ள கூட்டணி நிலவரம், புதிய கூட்டணி நிலவரம் குறித்து இப்போது பேசவேண்டியதில்லை. அடுத்த செயற்குழுவில் பேசலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.