தமிழகம்

ஜல்லிக்கட்டு: அவசர சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: அரசுகளுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு அனுமதி பெற்றுத்தர வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது நியாயமற்ற செயல். மேனகா காந்தியின் முயற்சி, வற்புறுத்தலால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதாக தெரிகிறது.

தற்போது, தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மக்கள் போராட்டங்கள் அறிவித்துள்ளனர். மக்களின் உணர்வுகள், கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உடனடியாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அனுமதி பெற்று தர வேண்டும்.

போர்க்கால நடவடிக்கை

தமிழகத்தில் கொசுவால் நோய்கள் பரவி வருகின்றன. ராஜபாளையத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 15 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கொசுவால் பரவும் நோய்களை தடுப்பதற்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பில் இல்லை. கொசு ஒழிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழக அரசு கொசுவால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த போர்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆலங்குளம் சிமென்ட் ஆலையை மூடக்கூடாது. ஆலையின் 1500 மெட்ரிக் டன் உற்பத்தி இலக்கை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலையை மூடினால் போராட்டம் நடத்துவோம்.

மத்திய அரசின் செயல்பாடு நூறு சதவீதம் ஏமாற்றம் தருகிறது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை. மாறாக ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளை சிறுபான்மையினருக்கு எதிராக தூண்டுவிடும் செயல்கள் நடைபெறுகின்றன. மதம், இனத்தால் மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தப்படுகிறது.

ஸ்ரீரங்கம் தேர்தல்

தமிழக அரசின் செயல்பாடு மோசமாக உள்ளது. அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதிமுக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வராதா? என்ற ஏக்கத்தில் மக்கள் உள்ளனர். ரங்கம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து மேலிடம்தான் முடிவு செய்யும். நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வென்றதுபோல், ரங்கம் தேர்தலில் வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வழங்க ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளது.

எல்லா தேர்தலிலும் தனித்துப் போட்டியிடவே காங்கிரஸ் விரும்புகிறது. இருப்பினும் தனியாக போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பதை மேலிடம்தான் முடிவு செய்யும். நடிகை குஷ்பு அரசியலை நன்கு தெரிந்து வைத்துள்ளார். கூட்டங்களில் அவரது பேச்சு மக்களைக் கவர்ந்துள்ளது.

தமிழக பாஜகவில் 60 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க இருப்பதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுவது வியப்பாக உள்ளது. தமிழக பாஜகவில் 6 ஆயிரம் உறுப்பினர்கள் கூட கிடையாது என்றார் அவர்.

SCROLL FOR NEXT