கிருஷ்ணகிரி அருகே நேற்று நடந்த சாலை விபத்தில், தமிழக அரசின் சிறப்புத்திட்ட அமலாக்கத்துறை அதிகாரி சாந்தினி கபூர் உட்பட 3 பேர் இறந்தனர்.
தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க முதன்மை செயலராக இருந்தவர் சாந்தினி கபூர் (54). இவர் நேற்று காரில் சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி குடும்பத்தினருடன் சென்றார். இவருடன் இவரது தங்கை பெட்ரிசியா (45), அவரது கணவர் ரிச்சர்ட் கிருஷ்டி (50), மகள் ஆனா கிறிஸ்டினா (20) ஆகியோர் சென்றனர். சென்னை அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி காவல் ஆய்வாளரும் பாதுகாப்பு அதிகாரியுமான செல்வராஜ் (53) காரை ஓட்டிச் சென்றார்.
இந்நிலையில் அந்த கார் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கிருஷ்ணகிரி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயில் என்னுமிடத்தில் வரும் போது, ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து, சாலையின் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மினி லாரி மீது கார் மோதியது. மோதிய வேகத்தில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது அமைக்கப்பட்டிருந்த மின் கம்பம் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் முதன்மை செயலாளர் சாந்தினி கபூர், ரிச்சர்ட் கிருஷ்டி, செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய மினி லாரி மீது அவ்வழியே ஓசூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற மற்றொரு கார் மோதியது. இந்த விபத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் சதீஷ் உட்பட 7 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
படுகாயம் அடைந்த பெட்ரிசியா மற்றும் ஆனா கிறஸ்டினா ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ராஜேஷ், எஸ்பி கண்ணம்மாள், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்ரமணியன் மற்றும் அலுவலர்கள் விபத்தில் காயம் அடைந்த பெட்ரிசியா, ஆனாவை மேல்சிகிச்சைகாக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.