வழக்கறிஞர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நேற்று தொடங்கிவைத்தார்.
தமிழகம் மற்றும் புதுவை பார் கவுன்சில் சார்பில், வழக்கறி ஞர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அமல்ராஜ் முன்னிலை வகித்தார். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது:
குடியரசு தினமான இந்நாள் மிக முக்கியமான நாள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்த நாள். சுதந்திரப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. வழக்கறிஞர்களுக்கு இன்று சமூகப் பாதுகாப்பு இல்லை. அவர்கள் தினக்கூலி அடிப்படையில் சம்பளம் பெறும் நிலை உள்ளது. பணிக்குச் சேரும்போது வழக்கறிஞர்களின் சம்பளம் மிகக் குறைவாக உள்ளது. ஓரளவு அனுபவம் கிடைத்த பிறகுதான் அவர்களது சம்பளம் உயருகிறது.
இந்நிலையில், இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், வழக்கறிஞர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குகிறது. நீதித் துறையின் தர்மத்தை இளம் வழக்கறிஞர்களுக்கு கற்றுத்தர வேண்டும். இதற்கு மூத்த வழக்கறிஞர்கள் உதவவேண்டும். வழக்கறிஞர்களுக்கு உதவும் வகை யில், பார் கவுன்சில் இதுபோன்ற திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்தவேண்டும்.
இவ்வாறு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறினார்.
நிகழ்ச்சியில் ரூ.7.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மாநில தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள என்.பால் வசந்த குமார், நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, எம்.ஜெயச் சந்திரன், வி.தனபாலன், ஆர்.சுதாகர், வி.ராமசுப்பிரமணியன், அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, உயர் நீதிமன்றத் தில் நடந்த குடியரசு தின விழாவில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். நீதிபதிகள், நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.