தமிழகத்தில் நீர்வழிச் சாலைக்கான வாய்ப்புகள் ஏராளம் இருந்தும், மணல் மாஃபியாக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கூட்டுச் சதியால் நீர்வழிச் சாலை திட்டம் முடக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
நாடு முழுவதும் 101 ஆறுகளை போக்குவரத்துக்கான நீர்வழித் தடங்களாக மாற்றத் திட்டமிட்டிருப்பதாக மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் அறிவித்தார். இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுவதுடன் ஏராளமான அந்நியச் செலாவணி மிச்சப்படுத்தப்படும் என்கிறார்கள் இதை ஆதரிப்பவர்கள்.
தமிழகத்தில் இந்தத் திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ’தி இந்து’விடம் பேசிய நீர்நிலைகள் பராமரிப்புக்கான ‘சென்னை சபரி பசுமை அறக்கட்டளை’ செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:
‘‘மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் மற்றும் கேரளம் மாநிலங்கள் ஆறுகளில் தடுப்பணைகளை கட்டி நீரைத் தேக்கி நீர்வழிச் சாலைகளை முறையாக பயன்படுத்துகின்றன. ஆனால், தமிழகத்தில் அதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தும் இங்குள்ளவர்கள் அதற்கான சிந்தனையே இல்லாமல் இருக்கிறார்கள். கேரளத்தில் அனைத்து ஆறுகளிலும் ஆண்டுதோறும் தண்ணீர் உள்ளது. ஆனால், தமிழகத்தில் முக்கிய ஆறுகள் அனைத்துமே பெரும்பாலான நாட்கள் வறண்டே கிடக்கின்றன.
சுமார் 440 கிலோ மீட்டர் நீளம் கொண்டது பாலாறு. இதில் 20 சதவீதத்தை மட்டுமே தன்னகத்தில் வைத்திருக்கும் கர்நாடகம் அந்தப் பகுதிக்குள் 98 சதவீதம் தடுப்பணைகளைக் கட்டி, பாலாற்றை வற்றவிடாமல் பாதுகாக்கிறது. இதேபோல் தமிழகத்திலும் பாலாற்றில் தடுப்பணைகளைக் கட்டி நீரைத் தேக்கினால் 270 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீர்வழிச் சாலைகள் அமைத்து ஒன்பது மாவட்டங்களுக்கு போக்குவரத்தை ஏற்படுத்த முடியும். ஆனால், தமிழகம் 2 சதவீதம் கூட தடுப்பணைகளைக் கட்டாததால் இங்கு மட்டும் பாலாறு வறண்டு கிடக்கிறது.
தமிழகத்தில் ஆறுகள் வறண்டு கிடப்பதின் பின்னணியில் மணல் மாஃபியாக்களின் சதியும் இருக்கிறது. ஆற்றில் தண்ணீர் இருந்தால் அதள பாதாளம் வரை மணலைச் சுரண்ட முடியாது. என்பதால் ஆறுகளில் தண்ணீர் இருப்பதை மணல் மாஃபியாக்கள் விரும்புவதில்லை. இந்தச் சதிக்கு அரசியல்வாதிகளும் உடந்தை. இதனால்தான் தமிழகத்தில் நீர்வழிச் சாலை திட்டம் முடங்கிக் கிடக்கிறது.
ஆந்திராவின் நகரி தொடங்கி மரக்காணத்தை அடுத்த புதுச்சேரி எல்லை வரை சுமார் 420 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது பக்கிங்காம் கால்வாய். இது வடக்கு மற்றும் தெற்கு கூவம் ஆற்றை இணைத்தும் செல்கிறது. கூவத்தைச் சுத்தப்படுத்தி பக்கிங் காம் கால்வாய் வழியாக நீர் வழிச் சாலை அமைத்தால் சென்னைக்குள் பெரும்பகுதி போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். குஜராத் தின் சபர்மதி ஆறும் கூவம் போன்றதுதான்.
அதை மோடி தனது முயற்சியால் தூய்மைப் படுத்திவிட்டார். அத்தகைய நெஞ்சுறுதி இங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு இல்லை.
இது மட்டுமல்ல; தமிழகத்தில் உள்ள முக்கியத் துறைமுகங்கள் அனைத்தும் ஆறுகளை ஒட்டி அமைந்திருப்பதால் அவைகளுக் கும் நீர்வழிச் சாலைகள் ஏற்படுத்த முடியும். சென்னை துறைமுகத்துக்கும் எண்ணூர் துறைமுகத்துக்கும் இடையே உள்ள தூரம் 48 கிலோ மீட்டர். இவ்விரு துறைமுகங்களையும் இணைக் கும் வகையில் நீர்வழிச் சாலை அமைக்கப்பட்டால், தொழிற்சாலைகள் நிறைந்த இந்தப் பகுதியில் சரக்குப் போக்குவரத்தால் ஏற்படும் நெரிசல் அடியோடு நீங்கிவிடும். நீர்வழிச் சாலைகளை உருவாக்கினால் அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வேலைவாய்ப்புகள் பெருகும் என்பதால் சிறு வணிகத்தையும் ஊக்குவிக்கலாம்’'.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.