சுனாமி பேரழிவால் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பின் (Environmental Protection) அவசியம் மற்றும் தேவையை மனித சமுதாயம் தற்போது உணர ஆரம்பித்துள்ளது. சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கல்வி, சுற்றுச்சூழல் மேலாண்மை போன்ற படிப்புகளும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. பேரிடர் நிகழ்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான நவீன தொழில் நுட்பங்களை கண்டறியும் முயற்சிகளும் தீவிரம் பெற்றுள்ளன.
அதேநேரத்தில், பண்டைய காலத் தமிழன் கடற்கரைகளில் மரச் சோலைகள் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் தடுப்புகளை பாதுகாப்பு அரணாக அமைத்து, ஆழிப்பேரலை களை தடுத்ததாக கூறப்படும் செய்தி அதிசயிக்க வைக்கிறது. சங்க இலக்கி யங்களில் இதற்கான ஆதாரங்கள் காணப்படுவதாக திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழக தமிழ் துணைப் பேராசிரியர் சி.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலாண்மைச் சிந்தனை
இதுகுறித்து, அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இயற்கை பேரழிவுகள் பல நேரங்களில் பண்டைய தமிழர் களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட் டன. இந்த பேரழிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது ஆழிப் பேரலைகள். இவற்றை பண்டைய தமிழன் கடல்கோள் எனக் குறிப்பிட் டான். ஆழிப்பேரலையின் உக்கிர தாண்டவத்தால் பண்டைய தமிழகம் உருக்குலைந்ததை இறையனார் அகப்பொருள் உரை, அடியார்க்கு நல்லாரின் உரைகளில் காணலாம்.
தொல்காப்பியத்தில், ‘வருசிறைப் புனலை கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை’ (தொல்.பொருள்.65) என்று புனலின் வேகத்தை கற்சிறை (அணைக்கட்டு) கொண்டு தடுத்து, அதை வேளாண்மைக்கு பயன்படுத்திய செய்தியை அறிய முடிகிறது. நீர்ப் பெருக்கத்தை, வெள்ளத்தைத் தடுக்க அணை கட்டினர். சோழ மன்னன் கட்டிய கல்லணையை, இன் றைய பொறியாளர்களும் வியக்கும் வண்ணம் கட்டிய பெருமை பண்டைய தமிழர்களையே சேரும்.
நில அதிர்வும், ஆழிப்பேரலையும்
ஆழிப்பேரலைகள் ஏற்படக் காரணம் நில அதிர்வே. இக்கருத்து சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நில அதிர்வின் விளைவால், கடலின் எல்லை மாறுபடுவதை, ‘நிலம்புடை பெயரினும், நீர்த்தீப் பிறழினும் இலங்குதிரைப் பெருங்கடற் எல்லை தோன்றிலும்’ (குறுந்: 373) எனும் குறுந்தொகைப் பாடலடிகள் மெய்ப்பிக்கின்றன. இத்தகைய இயற்கை மாற்றங்களையும், அதனால் ஏற்படும் பேரழிவுகளையும் பற்றி பண்டைய தமிழர் அறிந்திருந்தனர் என்பதை,
பெடுநிலங்கிளறினும் (நற். 201)
நிலம்புடை பெயர்வதாயினும் (நற். 9)
நிலத்திறம் பெயருங்காலை யாயினும் (பதி.பத்து 63:6)
நிலம்புடை பெயர்வதாயினும் (புறம். 34:5)
ஆகிய பாடலடிகளின் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு கடலுக்கு அடியில், நில அதிர்வு ஏற்படுவதால் ஆழிப்பேரலைகள் உருவாகக் காரணமாக இருந்த உண்மையைச் சங்கத் தமிழர் அறிந்திருந்தனர்.
இயற்கை சீற்றம் விழிப்புணர்வு
நில அதிர்வினால் ஏற்படும் கடல் சீற்றம், கொந்தளிப்பு, கடல் உள், வெளி வாங்குதல் போன்ற பல வகைப்பட்ட இயற்கைச் சீற்றங்களில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ளும் வழிமுறைகளை பழந்தமிழர் அறிந்திருந்தனர்.
இலக்கணத்தைக் காக்க இலக்கியத்தைப் போற்றி வளர்த்தது போல, உலகைக் காக்க சூழல் காப்பில் கவனம் செலுத்தினர். பொருள் இல்லாத சொல், மொழி வளத்தை பாதிப்பது போல சோலைகள் இல்லாத கடற்கரை ஆழிப்பேரலையால் பாதிக்கப்படும். அதனால், சுனாமியை தடுக்கும் கடற்கரைச் சோலைகளின் சிறப்பினை உணர்ந்த சங்கச் சான்றோர், கடற்கரைகளில் புன்னை மரம், அடப்பங்கொடிகள், தாழை மரங்கள் ஆகியனவற்றை நட்டு கடற்கரை சோலை அமைத்திருந்ததை நற்றிணை (78), பதிற்றுப்பத்து (51), குறுந்தொகை (226), அகநானூறு (180) முதலிய சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
பண்டைய தமிழகத்தை பலமுறை ஆழிப்பேரலைகள் தாக்கிய சூழலில், அவற்றை எதிர்கொள்ள கடற்கரைச் சோலைகளை பாதுகாப்பு அரண்களாக தமிழர்கள் அமைத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.