குண்டர் சட்ட கைதிகள் தொடர்பான வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்ய காவல் துறை தாமதம் செய்கிறது. இதனால், நிரபராதிகள்கூட 9 மாதங்கள் வரை சிறையில் வாடவேண்டிய நிலை ஏற்படுகிறது. அத்தகைய காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்றங்கள் கடுமை காட்டினால் இந்த கொடுமை மாறும் என்கின்றனர் ஆர்வலர்கள்.
கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் வைத்திருப்போர் அல்லது கடத்துவோர், ரவுடிகள், வனக் குற்றவாளிகள், பாலியல் தொழிலில் ஈடுபடுவோர், குடிசையை அபகரிப்பவர்கள், சமூக வலைதள குற்றங்களில் (சைபர் கிரைம்) ஈடுபடுவோர் ஆகியோரை தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்டம் 1982-ன் கீழ் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்கலாம்.
முதல் குற்றத்துக்கே ‘குண்டாஸ்’
முன்பெல்லாம் பலமுறை குற்றம் செய்தவர்களே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர். இப்போது, முதல் முறை குற்றம் செய்தாலே சிறையில் அடைக்கும் வகையில் இச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்றவற்றில் ஒருவர் பதிவு செய்யும் தகவல், மற்றவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கினால் அந்த குற்றத்துக்காக, சம்பந்தப்பட்டவரை இச்சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியும்.
தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் தற்போது 23 முதல் 60 வயது வரையுள்ள 50 பெண்கள் உட்பட 1,700 பேர் குண்டர் சட்ட கைதிகளாக உள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 22-ன் கீழ், சென்னையில் மாநகர காவல் துறை ஆணையரும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவரை ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிடலாம். அதன்படி, கைது செய்யப்படுபவரை, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஆலோசனை வாரியம் (அட்வைசரி போர்டு) முன்பு 40 நாட்களுக்குள் ஆஜர்படுத்த வேண்டும். கைது செய்யப்பட்டதை இந்த வாரியம் உறுதி செய்த பிறகு, சம்பந்தப்பட்டவர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.இதில், பதில் மனு தாக்கல் செய்ய அரசு தாமதம் செய்வதால், வழக்கு முடிய 9 மாதங்கள் வரை ஆகிறது. அதுவரை குண்டர் சட்ட கைதிகள் சிறையில் வாடும் நிலை ஏற்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னை புழல் மத்திய சிறையில் கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி கைதிகள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதில், சிறைத்துறை அதிகாரிகள் 20 பேர், கைதிகள் 40 பேர் காயம் அடைந்தனர்.
இதை எதிர்த்து வழக்கறிஞர் புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை தலைமை நீதிபதி தலைமையிலான முதல் டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. ‘குண்டர் சட்ட வழக்குகளை கவனிக்க தனி அதிகாரியை நியமிக்கவேண்டும். விரைவாக பதில் மனு தாக்கல் செய்து வழக்கை முடிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டது. இதை யடுத்து நடந்த நீதிமன்ற சிறப்பு அமர்வில் 200 வழக்குகள் முடிக்கப்பட்டன. அதன் பிறகு, அந்த உத்தரவு பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வி.கண்ணதாசன் கூறியதாவது:
குண்டர் சட்டத்தில் கைது செய்யப் படுபவர்கள் வசதி படைத்தவராக இருந்தால், சட்ட ரீதியாக விரைந்து நிவாரணம் பெறுகின்றனர். வசதி இல்லாதவர்களுக்கு இலவச சட்ட உதவி மையம் கைகொடுத்தால் மட்டுமே நிவாரணம். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவோரின் அதிகபட்ச சிறைவாசம் ஓராண்டு காலம். இந்த வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்ய அரசு தாமதம் செய்கிறது. அதனால், ஒருவர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட் டுள்ளார் என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கவே 8 முதல் 9 மாதம் ஆகிவிடுகிறது. அவர்கள் அதுவரை சிறைவாசம் அனுபவிப்பது கொடுமை. இந்த நிலைக்கு காவல், நீதித்துறைகளே பொறுப்பு.
‘மனித உரிமை எங்கே?’
இதனால், தனிமனித உரிமை மட்டுமின்றி, கைதிகளின் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. சமுதாய சீரழிவுக்கும் வழிவகுக்கிறது. இந்த விஷயத்தில், மனித உரிமை அமைப்புகளும் கண்டும் காணாமல் இருப்பது வேதனை. குண்டர் சட்ட கைதிகள் தொடர்பான வழக்கை 2 மாதத்துக்குள் முடித்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அதற்கு, தாமதமாக பதில் மனு தாக்கல் செய்யும் அதிகாரிகள் மீது நீதிமன்றம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும். அந்த நிலை உருவானால், நிரபராதிகள் குண்டர் சட்டத்தில் சிறைவாசம் அனுபவிக்கும் கொடுமைக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு கண்ணதாசன் கூறினார்.